கன்னியாகுமரியில் மறியலில் ஈடுபட்ட 9000-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு
கன்னியாகுமரியில் ரெயில் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்ட 9000-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
கன்னியாகுமரி,
தமிழகத்தின் குமரி மாவட்டம் மற்றும் கேரள கடலோர பகுதிகளில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள், கடந்த 30-ந்தேதி தாக்கிய ‘ஒகி’ புயலில் சிக்கி மாயமானார்கள். இதில் ஏராளமானோர் மீட்கப்பட்ட நிலையில், இன்னும் நூற்றுக்கணக்கான மீனவர்கள் கரை திரும்பவில்லை. அவர் களை தேடும் பணியில் கடற்படை, கடலோர காவல்படை மற்றும் விமானப்படையினர் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். மாயமான மீனவர்களை தேடி கண்டுபிடிக்கும் பணி நீடிக்கிறது.
இதற்கிடையே, மாயமாகி இன்னும் கரை திரும்பாத மீனவர்களை மீட்க விரைவாக நடவடிக்கை எடுக்கக்கோரி ஆர்ப்பாட்டமும் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே மீனவர்கள் தரப்பில் குழித்துறை ரெயில் நிலையத்தில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. மீனவர்கள் தரப்பில் சாலை மறியல் மற்றும் ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. மீனவர் பிரச்சினை தொடர்பாக மார்த்தாண்டம், குழித்துறை பகுதியில் ரெயில் மறியல் போராட்டம் நடத்தியவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. போராட்டம் தொடர்பாக 9000-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
குழித்துறையில் ரெயில் மறியலில் ஈடுபட்டவர்கள், மார்த்தாண்டம் மற்றும் களியாக்காவிளையில் சாலை மறியலில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.