தாயை கொலை செய்த தஷ்வந்த் தந்தையையும் கொலை செய்ய திட்டம் தீட்டினார்: போலீசார்

தாயை கொலை செய்த தஷ்வந்த் தந்தையையும் கொலை செய்ய திட்டம் தீட்டினார் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Update: 2017-12-10 07:36 GMT

சென்னை,

காஞ்சீபுரம் மாவட்டம் மாங்காடு அடுத்த மவுலிவாக்கம், மாதா நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பெற்றோருடன் வசித்து வந்த 6 வயது சிறுமி ஹாசினியை அதே அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த தஷ்வந்த்(வயது 24) என்பவர் கடந்த பிப்ரவரி மாதம் கற்பழித்து கொலை செய்தார். அவரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.

பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அவர் தனது தாயார் சரளாவை கொன்று 25 பவுன் நகைகளை கொள்ளையடித்து விட்டு தப்பிச்சென்றுவிட்டார்.

அவரை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தஷ்வந்த் மும்பையில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து தனிப்படையினர் மும்பைக்கு விரைந்தனர். அங்கு சூதாட்ட விடுதி ஒன்றில் விளையாடிவிட்டு வெளியே வந்த அவரை கைது செய்தனர்.

ஆனால், போலீசாரை தாக்கி விட்டு கைவிலங்குடன் தப்பி ஓடிய தஷ்வந்தை நேற்று முன்தினம் மும்பை அந்தேரி பகுதியில் பதுங்கியிருந்தபொழுது மீண்டும் போலீசார் கைது செய்தனர். அவர் தப்பிக்காமல் இருக்க கை, கால்களை சங்கிலியால் போலீசார் கட்டிப்போட்டனர்.

இதையடுத்து தஷ்வந்தை விமானம் மூலம் போலீசார் நேற்றிரவு 10.15 மணிக்கு சென்னைக்கு கொண்டு வந்தனர்.

அவரிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் தாயை கொலை செய்த தஷ்வந்த் தந்தையையும் கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார் என தெரிய வந்துள்ளது.  தாயார் அடிக்கடி திட்டியுள்ளார்.  செலவுக்கு பணம் தரவும் மறுத்துள்ளார் என தஷ்வந்த் போலீசில் கூறியுள்ளார்.

கொலை செய்ய பயன்படுத்திய இரு சக்கர வாகனம் கோயம்பேட்டில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை கொண்டு வரப்பட்ட தஷ்வந்திடம் விசாரணை முடிந்தது.  இதனால் அவர் இன்று சிறையில் அடைக்கப்பட வாய்ப்பு உள்ளது என போலீசார் கூறியுள்ளனர்.

மேலும் செய்திகள்