தமிழக கவர்னரிடம் ஊழல் பட்டியலை வழங்கினார், அன்புமணி ராமதாஸ்

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை, டாக்டர் அன்புமணி ராமதாஸ் நேற்று சந்தித்து, தமிழக அரசு மீது ஊழல் பட்டியலை வழங்கினார்.

Update: 2017-12-09 23:15 GMT
சென்னை,

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை, டாக்டர் அன்புமணி ராமதாஸ் நேற்று சந்தித்து, தமிழக அரசு மீது ஊழல் பட்டியலை வழங்கினார்.

ஊழல் பட்டியல்

பா.ம.க. இளைஞரணி தலைவரும், எம்.பி.யுமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் நேற்று சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு வந்தார். அவருடன் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, மாநில துணை பொதுச்செயலாளர் ஏ.கே.மூர்த்தி ஆகியோரும் வந்தனர். அங்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து, தமிழக அரசுத்துறைகள் மற்றும் அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டு புகார்களை அறிக்கையாக அன்புமணி ராமதாஸ் அளித்தார்.

இப்புகார்கள் அடிப்படையில் தமிழக அரசு மீது விசாரணை நடத்த ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்தார்.

இந்த சந்திப்பை தொடர்ந்து டாக்டர் அன்புமணி ராமதாஸ் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கவர்னர் உத்தரவாதம்

உலக ஊழல் எதிர்ப்பு தினத்தையொட்டி, தமிழகத்தில் நடைபெற்று வரும் ஊழல்கள் அதற்காக பெறப்படும் லஞ்சம் உள்ளிட்டவை குறித்து 206 பக்க ஊழல் குற்றச்சாட்டு அறிக்கையை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து கொடுத்திருக்கிறோம். ‘தமிழகத்தை எப்படியாவது காப்பாற்றுங்கள். ஊழலால் தமிழக நிர்வாகம் சீர்கெட்டு இருக்கிறது. இது இன்னமும் கெட்டுவிடாமல் காப்பாற்றுங்கள்’ என கவர்னரிடம் கெஞ்சி இருக்கிறோம்.

நாங்கள் கொடுத்த ஊழல் அறிக்கையை வரிக்கு வரி படிப்பேன் என்றும், அறிக்கையில் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளில் உண்மை இருந்தால் நிச்சயம் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்வேன் என்றும் கவர்னர் எங்களிடம் உத்தரவாதம் அளித்தார். அவர் கூறியதை நாங்கள் நம்புகிறோம். உரிய நடவடிக்கைகளுக்காக நாங்கள் ஒரு மாதம் காத்திருக்கிறோம் என்றும் கூறியுள்ளோம். கவர்னர் மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது.

விசாரணை ஆணையம்

தற்போது கவர்னரிடம் அளித்துள்ள புகார் மனுவில் மணல் கொள்ளை, கிரானைட் ஊழல், உயர் கல்வித்துறையில் துணைவேந்தர், பேராசிரியர்கள் நியமன ஊழல், தனியார் மின்சார கொள்முதலில் ஊழல், மருத்துவ காப்பீட்டு திட்ட ஊழல், குட்கா ஊழல், வாக்கி-டாக்கி கொள்முதல் ஊழல், பொதுப்பணித்துறையில் தார் கொள்முதல் ஊழல், சேகர் ரெட்டியிடம் இருந்து அமைச்சர்கள் பணம் பெற்ற ஊழல், கேபிள் டி.வி. ஊழல், டி.என்.பி.எஸ்.சி. முதல் தொகுதி தேர்வு ஊழல், உறுப்பினர்கள் நியமன ஊழல், தொழில்துறை ஊழல், சத்துணவு பணியாளர் நியமன ஊழல், சி.எம்.டி.ஏ. கட்டிட அனுமதி ஊழல், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக ஊழல் என எல்லாத்துறைகளிலும் நடந்த ஊழல் குற்றச்சாட்டுகளை தகுந்த ஆதாரங்களுடன் குறிப்பிட்டுள்ளோம். இப்புகார்கள் அடிப்படையில் தமிழக அரசு மீது விசாரணை நடத்த ஆணையம் அமைக்கப்பட வேண்டும்.

ஊழல் ஒழிப்பு

ஏற்கனவே கடந்த 2015-ம் ஆண்டு பிப்ரவரி 17-ந்தேதி அப்போதைய கவர்னர் ரோசய்யாவிடம் இதேபோல 18 ஊழல் குற்றச்சாட்டுகள் அடங்கிய 209 பக்க புகார் மனு அளித்தோம். ஆனால் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. நாங்கள் மனு கொடுத்தபோதே, அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தால் இன்றைக்கு லஞ்சம் வாங்கவே அனைவரும் பயப்பட்டு இருப்பார்கள்.

அதற்கு பின்னர் வந்த கவர்னரும் (வித்யாசாகர் ராவ்) அரசுக்கு கூட்டாளியாகவே செயல்பட்டார். ஆனால் தற்போதுள்ள கவர்னர் பன்வாரிலால் புரோகித் நல்ல நடவடிக்கை எடுப்பார் என்று நம்பிக்கை உண்டு. ஊழலை ஒழிக்கவேண்டும், லஞ்சத்தை தவிர்க்கவேண்டும் என்ற நிலையை தமிழகம் எட்ட அவர் உதவுவார் என்றும் நம்புகிறோம். அவரது நல்ல நடவடிக்கைக்காக அவர் கேட்டுக்கொண்டப்படி ஒரு மாதம் காலம் காத்திருப்போம்

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்