ஆர் கே நகர் இடைத்தேர்தலை நடத்தும் அதிகாரி வேலுசாமி மாற்றம் பிரவீன் நாயர் நியமனம்

ஆர்.கே.நகர் தேர்தல் நடத்தும் அலுவலராக நியமிக்கப்பட்ட வேலுச்சாமிக்கு பதில் பிரவீன் நாயர் நியமனம் செய்யபட்டு உள்ளார்.

Update: 2017-12-09 08:50 GMT

சென்னை


ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு கடந்த ஓராண்டாக காலியாக இருந்த ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை நடத்தும் அலுவலராக வேலுச்சாமி நியமிக்கப்பட்டிருந்தார்.


நடிகர் விஷாலின் வேட்புமனுவை நிராகரித்தது தொடர்பாக பெரும் சர்ச்சை கிளம்பியது. மேலும் பிரசாரத்திற்கு அனுமதி வழங்குவது தொடர்பாகவும் வேலுச்சாமி மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. ஆளும் அதிமுகவுக்கு ஆதரவாக வேலுச்சாமி செயல்படுவதாகவும் புகார்கள் எழுந்தன.


இதுபோன்ற பல்வேறு புகார்களின் காரணமாக தேர்தல் நடத்தும் அலுவலரை மாற்ற வேண்டும் என திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன.


இந்நிலையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடத்தும் அலுவலர் வேலுச்சாமி மாற்றப்பட்டு பிரவீன் நாயர்  நியமிக்கப்பட்டுள்ளார். வேலுச்சாமி மீதான புகார்களின் காரணமாக தேர்தல் ஆணையம் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது.

மேலும் செய்திகள்