கோவில்களை இடிக்கப்போவதாக கூறிய திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எச்.ராஜா
கோவில்களை இடிக்கப்போவதாக கூறிய திருமாவளவன் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, பாரதீய ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா கூறினார்.
கோவை
கேரளாவில் இருந்து சேலம் செல்லும் வழியில் கோவை ரெயில் நிலையத்தில் பாரதீய ஜனதா கட்சி நிர்வாகிகளை, தேசிய செயலாளர் எச்.ராஜா சந்தித்து பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
சிவன் கோவில் உள்ளிட்ட அனைத்து கோவில்களையும் இடிக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசி இருப்பது மத கலவரத்தை தூண்டும் செயலாகும். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஜிகாதிகளின் பின்னால் மறைந்து கொண்டு பேசி வருகிறார். கடந்த ஆண்டு தனது சமூக பெண்களை தவிர்த்து, மற்ற சமூக பெண்களை திருமாவளவன் இழிவாக பேசினார். பெண்களை பற்றி பேசியதை தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஏற்றுக்கொள்கிறாரா?
கோவில்களை இடிப்போம் என்று கூறி சமூக நல்லிணக்கத்திற்கு எதிராக செயல்படும் திருமாவளவனை குண்டர் சட்டத்தில் அடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய தமிழகம் கட்சித்தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியை போல நல்ல விஷயங்களை, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு திருமாவளவன் சொல்லி கொடுப்பதில்லை. திருமாவளவன் பெண்களை இழிவாக பேசியது நிச்சயம் ஆர்.கே.நகர் தேர்தலில் எதிரொலிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.