ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஜெ.தீபாவுக்கு விசாரணை ஆணையம் ‘சம்மன்’

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஜெ.தீபாவுக்கு விசாரணை ஆணையம் ‘சம்மன்’

Update: 2017-12-06 22:15 GMT
சென்னை,

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஜெ.தீபாவுக்கு விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது. அவர், வருகிற 13-ந் தேதி ஆணையத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தில் ஜெயலலிதாவின் அண்ணன் மகளும், எம்.ஜி.ஆர்.-அம்மா-தீபா பேரவை பொதுச்செயலாளருமான ஜெ.தீபாவின் கணவர் மாதவன் நேற்று காலை 10.30 மணிக்கு ஆஜரானார்.

விசாரணை ஆணையத்தில் மாதவன் ஏற்கனவே அளித்த புகார் மனுவில் ஜெயலலிதா மரணம் குறித்து எழுப்பி உள்ள சந்தேகங்கள் பற்றி நீதிபதி ஆறுமுகசாமி அவரிடம் சில கேள்விகளை கேட்டார். அதற்கு மாதவன் பதில் அளித்தார். அதன்பின்பு அதுதொடர்பான சில ஆவணங்களை நீதிபதி கேட்டார். அந்த ஆவணங்களை தாக்கல் செய்ய கால அவகாசம் அளிக்க வேண்டும் என்று மாதவன் கேட்டுக்கொண்டார்.

இதைத் தொடர்ந்து வருகிற 15-ந் தேதி மீண்டும் நேரில் ஆஜராகி அந்த ஆவணங்களை தாக்கல் செய்யும்படி மாதவனுக்கு நீதிபதி ஆறுமுகசாமி உத்தரவிட்டார். மாதவனிடம் சுமார் 1½ மணி நேரம் விசாரணை நடந்தது.

அதேபோன்று அரசு மருத்துவர் டிட்டோவும் நேற்று ஆணையத்தில் ஆஜரானார். சுமார் ½ மணி நேரம் நீதிபதி அவரிடம் விசாரணை நடத்தினார்.

ஆணையத்தில் ஆஜராகி விட்டு வெளியே வந்த மாதவன் நிருபர்களிடம் கூறியதாவது:-

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 20-ந் தேதி மெட்ரோ ரெயில் தொடக்க விழாவில் கலந்து கொண்ட ஜெயலலிதா அதன்பிறகு வெளியே வரவில்லை. ஜெயலலிதாவை சந்திக்க அதிகாரிகளையும் அனுமதிக்கவில்லை. இதன்மூலம் 20-ந் தேதியே ஏதோ நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறது.

சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஒருவர், ஜெயலலிதா மரணத்தில் பல சந்தேகம் இருப்பதாக கூறியதை ஆணையத்தின் நீதிபதி ஆறுமுகசாமியிடம் எடுத்துக்கூறினேன். 15-ந் தேதி என்னிடம் உள்ள கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்வேன். தீபாவின் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டதில் உள்நோக்கம் உள்ளது.

வேட்புமனுவை முறையாக பூர்த்தி செய்யவில்லை என்ற குற்றச்சாட்டை ஏற்க முடியாது. ஏனென்றால் கடந்த முறை தாக்கல் செய்த வேட்புமனுவை ஆணையம் ஏற்றுக்கொண்டுள்ளது. கடந்த முறை பின்பற்றிய நடைமுறையை பின்பற்றியே தற்போதும் மனு தாக்கல் செய்தோம்.

அப்படி இருக்கும்போது தற்போது முறையாக ஆவணங்களை பூர்த்தி செய்யவில்லை என்பதை எப்படி ஏற்க முடியும். தீபா தேர்தலில் போட்டியிட்டால் வெற்றி பெற்று விடுவார் என்ற அச்சத்தின் காரணமாக சிலர் அவரது வேட்பு மனுவை தள்ளுபடி செய்ய வைத்துள்ளனர். வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடர ஆலோசித்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மாதவனுக்கு ஆணையம் சம்மன் அனுப்பி இருந்த நிலையில் அவரது மனைவி ஜெ.தீபாவுக்கு ஆணையத்தில் இருந்து சம்மன் எதுவும் வராததால் அதுகுறித்து விசாரிப்பதற்காக தீபாவின் வக்கீல் தொண்டன் சுப்பிரமணி ஆணையத்துக்கு நேற்று வந்தார். பின்னர் அவர் ஆணையத்தின் செயலாளரை சந்தித்து பேசினார்.

அப்போது அவர், தீபாவுக்கு சம்மன் தயாராக இருப்பதாகவும், வருகிற 13-ந் தேதி தீபா ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து அந்த சம்மனை தீபாவின் வக்கீல் பெற்றுக்கொண்டார்.

இன்று (வியாழக்கிழமை) அரசு மருத்துவர்கள் பாலாஜி, தர்மராஜ் ஆகியோர் ஆணையத்தில் ஆஜராகின்றனர்.

மேலும் செய்திகள்