வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்புகளை வழங்கியவர் ரத்தினவேல் பாண்டியன் -சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி
வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்புகளை நீதிபதி ரத்தினவேல்பாண்டியன் வழங்கி உள்ளார் என்று சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இந்திரபானர்ஜி கூறினார்.
சென்னை,
ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக பணியாற்றியபோது பல வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்புகளை நீதிபதி ரத்தினவேல்பாண்டியன் வழங்கி உள்ளார் என்று சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இந்திரபானர்ஜி கூறினார்.
நெல்லை மாவட்டம் திருப்புடைமருதூரைச் சேர்ந்தவர் நீதிபதி ரத்தினவேல்பாண்டியன். மிக சாதாரண குடும்பத்தில் பிறந்த இவர் தனது கடின உழைப்பால் வக்கீல் படிப்பை முடித்து சென்னை ஐகோர்ட்டு நீதிபதியாகவும், சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாகவும் பணியாற்றி ஓய்வு பெற்றார். இவர் தனது வாழ்க்கை வரலாற்றை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் ‘எனது வாழ்க்கை பயணம் ஏ டூ இசட்’ என்ற தலைப்பில் புத்தகமாக எழுதி உள்ளார்.
இந்த புத்தகத்தின் வெளியீட்டு விழா மனித உரிமைகளுக்கான வக்கீல்கள் அமைப்பின் மூலம் சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நேற்று மாலை நடந்தது. விழாவுக்கு ஓய்வு பெற்ற குஜராத் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி பி.ஆர்.கோகுலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி புத்தக்கத்தை வெளியிட்டார். அதன் முதல் பிரதியை ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் பெற்றுக்கொண்டார்.
விழாவில் தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி பேசும்போது, ‘சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக ரத்தினவேல்பாண்டியன் பணியாற்றிய போது அவர் முன்பு ஆஜராகி வாதாடும் பாக்கியத்தை நான் பெற்றுள்ளேன். அனைவரிடமும் அவர் மிக எளிமையாக நடந்து கொள்வார். சென்னை ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதியாக இருந்தபோது அவர் பல்வேறு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்புகளை வழங்கி உள்ளார். அந்த தீர்ப்பின் மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள் பலர் பயன் அடைந்து வருகின்றனர்’ என்றார்.
ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கோகுலகிருஷ்ணன் பேசும்போது, ‘நல்ல மனம் இருந்தால் உயர்ந்த இடத்துக்கு வரலாம் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் ரத்தினவேல் பாண்டியன். மிகச்சிறந்த உழைப்பாளி என்ற போதிலும் அவரது நல்ல மனமே அவரை மிக உயர்ந்த பதவியில் அமர்த்தியது’ என்றார்.
விழாவில் கலந்துகொண்ட ஓய்வு பெற்ற காஷ்மீர் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி பால்வசந்தகுமார் பேசும்போது, ‘நீதிபதி ரத்தினவேல்பாண்டியன் இளம் வக்கீல்களுக்கு முன்னோடியாக வாழ்ந்து காட்டி இருக்கிறார். அவரது வழியை பின்பற்றினால் இளம் வக்கீல்கள் நிச்சயமாக உயர்ந்த இடத்தை அடைய முடியும்’ என்றார்.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேசும்போது, ‘என்னை ஒரு வக்கீலாக அடையாளம் காட்டியவர் ரத்தினவேல்பாண்டியன். எனது வாழ்க்கையில் முன்னோடியாக இருந்தார். அவரது அன்பை வாழ்க்கையில் ஒருபோதும் மறக்கமுடியாது. அவர் இன்னும் பல்லாண்டு காலம் வாழ வேண்டும்’ என்றார்.
விழாவில் ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி பிரபாஸ்ரீதேவன், நீதிபதி ரத்தினவேல் பாண்டியனின் மகனும் சென்னை ஐகோர்ட்டு நீதிபதியுமான சுப்பையா, மூத்த வக்கீல்கள் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, மாசிலாமணி, டி.ஆர்.ராஜகோபாலன், ஆர்.காந்தி, மதுரை ஐகோர்ட்டு கிளை வக்கீல்கள் சங்கத்தலைவர் சாமித்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.