தற்போதைய சூழ்நிலையில் எனது மனு நிராகரிக்கப்பட வாய்ப்பு உள்ளது - ஜெ.தீபா

தற்போதைய சூழ்நிலையில் எனது மனு நிராகரிக்கப்பட வாய்ப்பு உள்ளது என ஜெயலலிதா அண்ணன் மகள் ஜெ.தீபா கூறினார்.

Update: 2017-12-04 10:43 GMT
சென்னை, 

ஆர்.கே.நகர் தொகுதிக்கு வருகிற 21-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அ.தி. மு.க., தி.மு.க., டி.டி.வி. தினகரன் அணி, பா.ஜ.க., நடிகர் விஷால், நாம் தமிழர் கட்சி, ஜெ.தீபா ஆகியோருக்கு இடையே  7 முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை வரை 30 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். கடைசி நாளான இன்றும் சிலர் மனுதாக்கல் செய்தனர். முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் அனைவரும் ஏற்கனவே வேட்புமனு தாக்கல் செய்து விட்டனர். பிரதான கட்சிகளில் பாரதீய ஜனதா கட்சியின் வேட்பாளர் கரு.நாகராஜன் இன்று மனுதாக்கல் செய்தார்.

சுயேட்சை வேட்பாளர்களாக களம் இறங்கும் நடிகர் விஷால், ஜெ.தீபா ஆகியோரும் இன்று தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். ஆர்.கே.நகர் தொகுதியை முன் மாதிரி தொகுதியாக மாற்றிக் காட்டுவேன் என்ற  கோஷத்துடன் நடிகர் விஷால் களம் இறங்கியுள்ளார்.

இந்த நிலையில் இன்று  3 மணியுடன் மனுதாக்கல் செய்ய அவகாசம் முடியும் நிலையில் வேட்பு மனு தாக்கல் செய்ய 42  சுயேட்சை வேட்பாளர்கள் அங்கு குவிந்து உள்ளனர்.  விஐபி  என்று பாகுபாடு இல்லாமல்   விஷால் , தீபா ஆகியோரும்  வரிசையில் நின்று வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்தனர். நடிகர் விஷால் மனு தாக்கல் செய்ய வரும் போது வரிசை படியே அனுமதிக்க வேண்டும்  என தேர்தல் அலுவலர் அலுவலகம் முன்பு சுயேட்சை வேட்பாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

3 மணியுடன் மனுதாக்கல் செய்யும் அவகாசம் முடிவடைந்தது. 3 மணிக்கு முன்பாகவே டோக்கன் வாங்கிய நபர்களால் மட்டுமே வேட்புமனுதாக்கல் செய்ய முடியும். வேட்பு மனுதாக்கல் செய்ய 90 பேர் காத்து இருந்தனர். அவர்களுக்கு டோக்கன் வழங்கபட்டது. இதில் நடிகர் விஷாலுக்கு 68ம் எண் டோக்கன் தரப்பட்டுள்ளது. ஜெ. தீபாவுக்கு 91-ம் எண் டோக்கன் தரப்பட்டுள்ளது.

வேட்பு மனுதாக்கல் செய்ய வந்த தீபா கூறியதாவது:-

தற்போதைய  சூழ்நிலையில் எனது மனு நிராகரிக்கப்பட வாய்ப்பு உள்ளது. ஆர்கே நகர் தேர்தலில் போட்டியிட எந்த சின்னத்தை கொடுத்தாலும் ஏற்றுக்கொள்வேன் என கூறினார்.

மேலும் செய்திகள்