கால்வாய்களை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் அரசு முதன்மை செயலாளரிடம், தி.மு.க. எம்.எல்.ஏ. மனு

சென்னை எழும்பூர் தொகுதியில் மழைநீர் கால்வாய்களை சரிசெய்யக்கோரி அரசு முதன்மை செயலாளரிடம், தி.மு.க. எம்.எல்.ஏ. மனு அளித்தார்.

Update: 2017-11-25 21:15 GMT
சென்னை,

சென்னை தலைமை செயலகத்தில் சிறு துறைமுகங்கள் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அரசு முதன்மைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சனை, எழும்பூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. கே.எஸ்.ரவிச்சந்திரன் சந்தித்து மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

சென்னை எழும்பூர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட பூந்தமல்லி நெஞ்சாலையில் உள்ள ரிப்பன் மாளிகை முதல் தினத்தந்தி அலுவலகம் வரை சாலையின் இருபுறங்களிலும் உள்ள மழைநீர் வடிகால்வாய்கள் மற்றும் நடைபாதைகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் மிகுந்த சிரமப்படுகிறார்கள். எனவே இந்த மழைநீர் வடிகால்வாய்கள் மற்றும் நடைபாதைகளில் பயன்படுத்தப்பட்ட பொருட்களின் தரத்தை ஐ.ஐ.டி. மூலம் பரிசோதித்து, உரிய விசாரனை செய்து தவறு ஏற்பட்டிருந்தால் இப்பணியை மேற்கொண்ட ஒப்பந்ததாரரையும் மேற்பார்வையிட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகளையும் குற்றப்பிரிவு மற்றும் துறைரீதியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.

எழும்பூர் தொகுதியில் 58-வது வார்டில் உள்ள ரித்தர்டன் சாலை தாழ்வான பகுதியாக இருப்பதால் அதை சுற்றியுள்ள நாயர் பாலம், அழகப்பா ரோடு, கங்காதீசுவரர் கோவில் தெரு, பூந்தமல்லி நெடுஞ்சாலை, சுப்பா லேன், லெட்டாங்ஸ் தெரு, பொன்னப்ப தெரு, தாக்கர் தெரு, புரசைவாக்கம் நெடுஞ்சாலை (டவுட்டன் சிக்னல்) ஆகிய தெருக்களில் இருந்து மழைநீர் ரித்தர்டன் சாலையில் தேங்குகிறது. சிறிது மழை பெய்தாலும் பெரு வெள்ளம் போல் காட்சியளிக்கிறது.

இந்த மழை நீர் செல்வதற்கு வசதியில்லாத காரணத்தால் இங்கு அமைக்கப்பட்ட மழைநீர் கால்வாயை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ரெயில்வே குடியிருப்பு நடைபாதையில் அமைக்கப்பட்ட மழைநீர் கால்வாயுடன் இணைக்க வேண்டும். அதே போல் ரித்தர்டன் சாலையிலிருந்து இடது புறம் திரும்பினால் ஒய்.டபிள்யூ.சி.ஏ. நடைபாதையிலிருந்து தினத்தந்தி அலுவலகம் வரை புதிய மழைநீர் கால்வாய் அமைக்க வேண்டும்.

ஈ.வி.கே.சம்பத் சாலையில் உள்ள தினத்தந்தி அலுவலகத்தில் இருந்த எதிரே போலீஸ் கமிஷனர் அலுவலகம் வரை 6 இஞ்ச் குழாய் தான் இருக்கிறது. இதனால் மழைநீர் செல்வதற்கு போதிய வழியில்லாததால் கமிஷனர் அலுவலகம் 3 மற்றும் 4-வது நுழைவுவாயில்கள், தினத்தந்தி அலுவலக நுழைவுவாயில், பெரியார் திடல், அகர்வால் பள்ளி, ஈ.வி.கே.சம்பத் லேன், மகாவீரர் காலனி, வைபவ் அடுக்கு மாடி குடியிருப்பு ஆகிய இடங்களில் தண்ணீர் தேங்குகிறது.

ஆகவே பணி நிமித்தம் காரணமாக இங்கு வரக்கூடிய பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் குடியிருப்புவாசிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகிறார்கள். ஆகவே தினத்தந்தி அலுவலகத்தில் இருந்து எதிரே போலீஸ் கமிஷனர் அலுவலகம் வரை மழைநீர் செல்வதற்கு புதிய கால்வாய் அமைத்தால் மழை நீர் தேங்குவதை தவிர்க்கலாம், இப்பணியை உடனடியாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்