முப்பெரும் விழா திடீரென நடத்தப்பட்டாலும் துணை முதலமைச்சருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது-அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

முப்பெரும் விழா திடீரென நடத்தப்பட்டாலும் துணை முதலமைச்சருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.

Update: 2017-11-25 15:20 GMT
சென்னை,

முதலமைச்சர் பழனிசாமி மற்றும் டிடிவி தரப்பு இரட்டை இலை சின்னத்திற்கு உரிமை கோரிய நிலையில், முதலமைச்சர் பழனிசாமி அணிக்கே இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. 

இன்று மதுரை அருகே உள்ள தோப்பூரில் 100 அடி உயர கம்பத்தில் அ.தி.மு.க. கொடியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை ஏற்றி 
வைத்தார். திருப்பரங்குன்றம் தொகுதி எம்.எல்.ஏ. ஏ.கே. போஸ் ஏற்பாடு செய்து இருந்தார்.

இந்த விழாவுக்கு ஓ.பன்னீர் செல்வம்  மற்றும் தலைவர்களுக்கு  அழைப்பு விடுக்கப்படவில்லை என ஓபிஎஸ் ஆதரவாளர் ஆஸ்பயர் சுவாமிநாதன் அதிருப்தி தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் இது தொடர்பாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியார்களிடம் கூறியதாவது:

தோப்பூர் முப்பெரும் விழா அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியிடாமல் திடீரென நடத்தப்பட்டது.  முப்பெரும் விழா திடீரென நடத்தப்பட்டாலும் துணை முதலமைச்சருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.  காலையில் அவரை நானே நேரில் சென்று அழைத்தேன். 

துணை முதலமைச்சர் கோயிலுக்கு செல்லவிருந்ததால் அவரால் வர இயலவில்லை.  எங்களுக்குள் எந்தவித இடைவெளியும் இல்லை, அதனை யாரும் ஏற்படுத்தவும் முடியாது.  ஈபிஎஸ்-ஓபிஎஸ் இரட்டை குழல் துப்பாக்கியாக கட்சியை வழி நடத்தி வருகிறார்கள். 

இரட்டை இலையில் ஒரு இலை ஈபிஎஸ், மற்றொரு இலை ஓபிஎஸ் என்று நாங்கள் பார்க்கிறோம்.   நாங்கள் அனைவரும் ஒற்றுமையுடன் தான் இருக்கிறோம்.  ஒவ்வொரு விஷயத்திலும் ஆலோசித்து முடிவு எடுக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்