‘கீழே விழுந்தால்தான் கையை ஊன்றவேண்டும், நாங்கள் நின்றுகொண்டிருக்கிறோம்’ மு.க.ஸ்டாலினுக்கு, டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பதில்

கீழே விழுந்தால்தான் கையை ஊன்றவேண்டும், நாங்கள் நின்றுகொண்டிருக்கிறோம் என்று மு.க.ஸ்டாலினுக்கு, டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பதிலடி கொடுத்துள்ளார்.

Update: 2017-11-21 20:45 GMT
சென்னை,

உலக மீனவர் தினத்தையொட்டி தமிழக பா.ஜ.க. மீனவர் அணி சார்பில் ‘நமோ’ மீன் மற்றும் மீன் உணவு கண்காட்சி சென்னை காமராஜர் சாலையில் உள்ள விவேகானந்தர் இல்லம் அருகே நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு, பா.ஜ.க. மீனவர் பிரிவு மாநில தலைவர் எஸ்.சதீஷ்குமார் தலைமை தாங்கினார்.

சிறப்பு விருந்தினர்களாக தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய கயிறு வாரிய தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர். வஞ்சிரம், சுறா, கருக்கான், இறால், செம்படக்கான் உள்பட பல்வேறு வகையான மீன்கள் கண்காட்சியில் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தன. அதனை டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பார்வையிட்டார்.

இதையடுத்து டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மீனவர்கள் மீது தனி அக்கறை கொண்டு மீனவ சமுதாயத்தை பாதுகாப்பதில் பா.ஜ.க. அதிக அக்கறை காட்டி வருகிறது. மத்திய அரசு ரூ.1,200 கோடி ஆழ்கடல் மீன் பிடிப்பிற்காக ஒதுக்கி, ரூ.200 கோடியை கொடுத்துள்ளது.

மீனவர்கள் பாதுகாப்பு, பொருளாதார மேம்பாடு பற்றியே சிந்திக்காமல் இருந்த சமயத்தில் இன்று அவர்களை பற்றி சிந்தித்து கொண்டிருக்கும் ஒரே கட்சி பா.ஜ.க.வும், மோடியின் ஆட்சியும் தான். மீனவர்களை வைத்து அரசியல் செய்ய நினைப்பவர்கள் இன்றும் அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள்.

ராமேசுவரம் மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடைபெற்றது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று மத்திய பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் தெளிவாக சொல்லியிருக்கிறார். ஆனால், அவர் சொன்ன முந்தைய வார்த்தையை மட்டும் வைத்து கொண்டு, அவர் தவறாக பேசி விட்டார் என்று இங்குள்ள கட்சி தலைவர்கள் அரசியல் செய்கிறார்கள்.

மீனவர்களுக்காக குரல் கொடுக்கிறோம் என்று சொல்பவர்கள் ஆட்சியில் இருந்தபோது மீனவர்கள் நலனை பாதுகாக்கவும், பொருளாதாரத்தை மேம்படுத்தவும் எதையும் செய்யவில்லை.

கவர்னர் ஆய்வுக்கு ஆளுங்கட்சி ஆதரவாக உள்ளது, வரவேற்கிறது. ஆய்வு தங்களுக்கு உறுதுணையாக இருக்கிறது என்று ஆளுங்கட்சி நினைக்கிறது. மக்களும் நினைக்கிறார்கள். கவர்னர் மாளிகை அறிக்கை கூட மக்கள் ஆய்வை வரவேற்கிறார்கள் என்று கூறியுள்ளது. இது தமிழகத்தின் நலன் பயக்கும் வகையில் நடவடிக்கை தொடரும் என்று சொல்லப்பட்டுள்ளது.

மாநில சுயாட்சியை வைத்துக்கொண்டு இந்த மாநிலத்தை எவ்வளவு சூறையாடியிருக்கிறார்கள் என்பதற்கு முதலில் பதில் சொல்லட்டும். அதன் பிறகு மாநில சுயாட்சி பற்றி பேசட்டும். கவர்னர் ஆய்வால் எந்த விதத்திலும் மாநில சுயாட்சிக்கு பங்கம் வரவே இல்லை. மாநில பெருமைக்கும் பங்கம் வரவில்லை. ஒரு கவர்னர் மக்கள் மீது அக்கறையோடு இருக்கிறார் என்று நினைப்பது பலம் தானே தவிர பலவீனம் இல்லை. இத்தகைய பலம் பொருந்திய நடவடிக்கை எதிர்க்கட்சிகளுக்கு பலவீனமாக போய் விடும் என்பதற்காக பயப்படுகிறார்கள்.

அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றாக இருந்தாலும் மக்கள் அனைவரும் எங்களோடு இருந்து கொண்டிருக்கிறார்கள். மக்கள் பா.ஜ.க. நடவடிக்கையை வரவேற்கிறார்கள். அ.தி.மு.க.வை பற்றி பேசுவதை விட பா.ஜ.க.வை பற்றி தான் அதிகமாக, தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகிறார். பா.ஜ.க. வேரூன்றி விடும் என்று அவர் நிச்சயமாக நம்புகிறார். கீழே விழுந்தால்தான் கையை ஊன்றவேண்டும். நாங்கள் நின்று கொண்டிருக்கிறோம். அதனால் கையை ஊன்ற வேண்டிய அவசியம் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்