சசிகலாவின் பினாமிகள் வெளியாட்களாக இருப்பதால் கண்டறிவது சிரமம் -வருமான வரித்துறை

சசிகலாவின் பினாமிகள் வெளியாட்களாக இருப்பதால் தற்போதைய சூழலில் கண்டறிவது சிரமம் என வருமான வரித்துறை விளக்கம் அளித்துள்ளது.

Update: 2017-11-21 10:06 GMT
சென்னை

சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் சசி கலாவின் உறவினர் களின் வீடுகள், நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்கள் என பல இடங்களில் வருமான வரி அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி ஏராளமான ஆவணங்களை கைப்பற்றினார்கள். சோதனையை தொடர்ந்து சம்பந்தப்பட்டவர்களுக்கு ‘சம்மன்’ அனுப்பி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரி புலனாய்வு பிரிவு அலுவலகத்துக்கு  வரவழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதன் பின் வருமான வரித்துறை அதிகாரிகள், இளவரசியின் மகனும், ஜெயா டி.வி.யின் தலைமை செயல் அதிகாரியுமான விவேக்கின் தங்கை ‌ஷகிலா, ஜெயலலிதாவிடம் முன்பு உதவியாளராக இருந்த பூங்குன்றன் ஆகியோரை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வேதா இல்லத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார்கள். அங்கு சோதனையும் நடத்தப்பட்டது.

இந்த சோதனை குறித்து வருமான வரித்துறை விளக்கம் அளித்து உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

வரி ஏய்ப்பு தொடர்பாக பொருளாதார உளவுத்துறை கண்காணித்து கொடுத்த தகவலின் பேரிலேயே சோதனை நடத்தப்பட்டது. உறுதியான தகவல்கள் ஆவணங்கள் மூலம் சோதனை நடத்தப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட ஏராளமான பென்டிரைவ்கள்,  லேப்-டாப்களை ஆய்வுசெய்யும் பணி தொடங்கி  உள்ளது.

போயஸ் தோட்டத்தில் சசிகலாவின் 4 அறைகள், பூங்குன்றன் அறையிலும், சோதனை நடத்தப்பட்டது. ஜெயலலிதா அறையில் சோதனை நடத்தபட்டது. 5 அறைகளின் சாவிகளையும் ஷகிலா கணவர் ராஜராஜனிடம் இருந்து பெறப்பட்டது.

சோதனையில் 70க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்கள் கண்டு பிடிக்கப்பட்டது. 15 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளன. தேவை பட்டால் பெங்களூர் சிறையில் உள்ள சசிகலா, இளவரசியிடம் விசாரணை நடத்தப்படும்.

சசிகலா குடும்பத்தாருக்கு சொந்தமான இடங்களில் ரூ.7 கோடி, ரூ.5 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்; ரூ.1,430 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

சசிகலாவின் பினாமிகள் வெளியாட்களாக இருப்பதால் தற்போதைய சூழலில் கண்டறிவது சிரமம்; பினாமிகள் யார் என்பதை உறுதிப்படுத்த விரிவான விசாரணை நடக்கிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்