தமிழகம், புதுச்சேரியில் லேசான மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,
வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 27–ந் தேதி தொடங்கிய நிலையில் தமிழகத்தில் ஆங்காங்கே சில இடங்களில் பலத்த மழை பெய்தது. ஆனால் கடந்த 2 நாட்களாக சற்று மழை ஓய்ந்து வானம் தெளிவாக காணப்பட்டது.
இந்த நிலையில் தெற்கு தமிழக கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:– தெற்கு தமிழக கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நாளை(இன்று) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தமட்டில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்யும்.
கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தமட்டில் தமிழகத்தில் அதிக பட்சமாக 34 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், குறைந்த பட்சமாக 27 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகி உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தமட்டில், நீலகிரி மாவட்டம் குன்னூரில் அதிகபட்சமாக 6 செ.மீ, கோத்தகிரி பகுதியில் 4 செ.மீ. வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரத்தில் 2 செ.மீ. மழையும் பெய்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.