முதல்–அமைச்சர் உள்பட அமைச்சர்கள் வீட்டிலும் சோதனை நடத்த வேண்டும்

முதல்–அமைச்சர் உள்பட அமைச்சர்கள் வீட்டிலும் வருமான வரி சோதனை நடத்தினால்தான் உண்மை நிலவரம் தெரியும் என்று விஜயகாந்த் பேசினார்.

Update: 2017-11-18 22:30 GMT

சென்னை,

ரே‌ஷன் கடைகளில் சர்க்கரை விலை உயர்த்தப்பட்டதை கண்டித்தும், விலைவாசி உயர்வை கண்டித்தும் தே.மு.தி.க. சார்பில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் தலைமை தாங்கினார்.

அவருடைய மனைவி பிரேமலதா மற்றும் கட்சியின் மாநில–மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டம் மற்றும் பொதுக்கூட்ட மேடைகளில் பொதுவாக விஜயகாந்த் நின்றுகொண்டு பேசுவது வழக்கம். ஆனால் நேற்று மேடையில் போடப்பட்ட நாற்காலியில் அமர்ந்தபடி விஜயகாந்த் பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:– என்னுடைய பேச்சு உங்களுக்கு புரிகிறதா? நல்லவர்களாகிய மக்களுக்கு என்னுடைய பேச்சு புரியும். ஆனால் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்குத்தான் புரியாது.

சசிகலா உறவினர்கள் வீட்டில் வருமான வரி சோதனை நடத்துகிறார்கள். இதேபோல எடப்பாடி பழனிசாமி, துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் வீட்டிலும் வருமான வரி சோதனை நடத்தினால் தான் ஏழை மக்களுக்கு உண்மை நிலவரம் தெரியவரும்.

ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் நல்ல நடிகர்கள். தமிழகத்தில் மாநில சுயாட்சி எங்கு இருக்கிறது? தி.மு.க. தான் முதன்முதலில் ஊழலுக்கு வழிவகுத்தது அதன் வழியை பின்பற்றி தான் அ.தி.மு.க. இன்று ஊழலின் உச்சமாக திகழ்கிறது.

ரே‌ஷன் கடைகளில் மசூர் பருப்பை போடுகிறார்கள். இந்த மசூர் பருப்புகளை அமைச்சர்களையோ, ஆட்சியாளர்களையோ சாப்பிடச் சொல்லுங்கள் பார்க்கலாம்.

சர்க்கரை விலையை ஒரு ரூபாய், 2 ரூபாய் என்று 5 ஆண்டில் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றினாலும் பரவாயில்லை. ஆனால் ஒரு கிலோ ரூ.13 ஆக இருந்த சர்க்கரை விலையை ஒரேயடியாக ரூ.25 ஆக உயர்த்தியுள்ளனர். மக்களுக்கு ‘ஸ்லோ பாய்சன்’ போல விலை ஏற்றத்தை கொடுங்கள். அதை விடுத்து ஒரேயடியாக ரூ.12–ஐ ஏற்றியுள்ளது கண்டிக்கத்தக்கது. இதன் பெயர் தான் நியாயவிலை கடையா?

மக்கள் ரே‌ஷன் கடைக்கு போகக்கூடாது. பருப்பு, சர்க்கரை வாங்கக்கூடாது என்பது தான் அரசின் திட்டம். ஜி.எஸ்.டி. நல்லது தான், ஆனால் போடவேண்டிய அளவு தான் வரி போடவேண்டும். மாணவர்கள், இளைஞர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் தவித்து வருகின்றனர். அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடத்தி, மாநில அரசின் உரிமைகளில் கவர்னர் தலையிடுவது தவறு. வள்ளுவர் கோட்டம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்துகள் இருப்பு இல்லை என மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.

முன்னதாக பிரேமலதா விஜயகாந்த் பேசும்போது, ‘‘இரட்டை இலை சின்னம் கிடைக்காததால் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த திராணி இல்லாமல் ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள். ரே‌ஷன் கடைகளை மூடும் திட்டத்தின் அச்சாரம்தான் சர்க்கரை விலை உயர்வு. தமிழகத்தில் தற்போதைய சூழலை வைத்து பார்க்கும்போது அடுத்து கவர்னர் ஆட்சி வர உள்ளது. அதற்கு அடுத்து நம்முடைய கேப்டன் ஆட்சி தான். தற்போது நடக்கும் பொம்மை ஆட்சியை அகற்ற மக்கள் தயாராகிவிட்டார்கள்’’ என்றார்.

மேலும் செய்திகள்