நரேந்திர மோடி எடுத்துக்காட்டு: கவிஞர் வைரமுத்து புகழாரம்
விளைந்த கதிர் வளைந்து நிற்கும் என்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி எடுத்துக்காட்டாய் திகழ்கிறார் என்று கவிஞர் வைரமுத்து புகழாரம் சூட்டினார்.
சென்னை,
பிரதமர் நரேந்திர மோடி எழுதிய கவிதைகள் தொகுப்பு தமிழில் மொழிபெயர்த்து ‘சிந்தனைக் களஞ்சியம்’ என்ற பெயரில் வெளியிடப்பட்டது. இந்த விழாவில், கவிஞர் வைரமுத்து பேசியதாவது:–
இந்திய பிரதமர் மோடியை நான் 3 காரணங்களுக்காக பாராட்டுகிறேன். இந்தியாவின் மூத்த அரசியல் தலைவரான கருணாநிதியைத் தேடிப்போய் நலம்கேட்டார் மோடி. அந்த அரசியல் பண்பாட்டுக்கு என் முதல் பாராட்டு. நட்டுவைத்த வேலுக்கு பொட்டுவைத்தது போல் நிமிர்ந்து நிற்கும் நிர்மலா சீதாராமனை இந்திய பாதுகாப்புத்துறை மந்திரியாக நியமித்திருக்கிறார். இந்திய பெண் குலத்திற்கு பெருமை சேர்த்தற்காக என் இரண்டாம் பாராட்டு.
இன்று வெளியிடப்படும் இந்த நூலுக்கு நரேந்திர மோடியின் கவிதைகள் என்று பெயர் சூட்டாமல் ‘சிந்தனைக் களஞ்சியம்’ என்று பெயர் சூட்டியிருக்கிறார். அந்த இலக்கிய நேர்மைக்கு என் மூன்றாம் பாராட்டு. ‘நான் கவிஞனுமல்ல; காவியம் படைப்பவனுமல்ல; நான் கலைமகளின் பக்தன்’ என்று தன்னடக்கம் காட்டுகிற மோடி விளைந்த கதிர் வளைந்து நிற்கும் என்பதற்கு எடுத்துக்காட்டாய் திகழ்கிறார்.
9–ம் நூற்றாண்டில் தோன்றி 11–ம் நூற்றாண்டில் செம்மையுற்ற குஜராத்தி மொழியின் ஆதிகவி நரசிங்க மேத்தா. அதில் உரைநடையைத் தொடங்கி வைத்தவர் தல்பத்ராம். நவீனக் கவிதையைத் தொடங்கி வைத்தவர் நிரஞ்சன் பகத். முன்னோடிகள் செழுமை செய்த தாய்மொழியிலேயே தன் சிந்தனைகளை மோடி வடித்திருப்பது போற்றுதலுக்குரியது. இந்த நூலுக்குள் அரசியல் இல்லை; ஆன்மிகம் இல்லை; மதம் இல்லை; மந்திரம் இல்லை. ஆனால் மனிதன் இருக்கிறான்.
தன்முனைப்பும் தன்னம்பிக்கையுமிக்க ஓர் இதயத்தின் குரல் ஓங்கி ஒலித்துக்கொண்டேயிருக்கிறது. ‘‘தானே எரியும் அரிக்கேன் விளக்கு நான்; ஒளியைப் பிச்சை கேட்க மாட்டேன்; என் ஒளியே எனக்குப் போதும்’’ என்று எழுதுகிறார் மோடி. துணிந்த இதயத்தின் தெளிந்த குரல் இது.
சகிப்புத்தன்மைதான் ஒரு மூத்த தேசத்தின் முதுகெலும்பு. ஒரே ஜாதி மரங்கள் நெருங்கியிருந்தால் அதற்கு பேர் தோப்பு. பல்வேறு மரங்கள் கூடியிருந்தால்தான் அது காடு; அப்படித்தான் ஒரு நாடு. சகிப்புத்தன்மைதான் வேற்றுமையில் ஒற்றுமை காண்கிறது. நிலக்கரியின் சகிப்புத்தன்மைதான் வைரம். மண்ணின் சகிப்புத்தன்மைதான் பொன். பிப்ரவரியின் நான்காண்டு சகிப்புத்தன்மைதான் அதன் ஒருநாள் உயர்வு. தேசிய இனங்களின் சகிப்புத்தன்மை தான் தேசம். நமக்கே தெரிந்த இந்த உண்மை நாடாளும் பிரதமருக்கு தெரியாதா என்ன. அதனால்தான் அவர் அழகாக எழுதுகிறார். ‘‘ஒரு மதமும் இல்லை சம்பிரதாயமில்லை மனிதன் மனிதன்தான். வெளிச்சத்தில் வேற்றுமை உண்டோ?’’.
இனவாதங்களையும், மதவாதங்களையும் கடந்து நரேந்திர மோடியின் இந்த வரி இயக்கத்தின் குரலாக ஒலிக்க வேண்டும். இறைவன் பிறந்த இடம் இதுதான் என்றும், இங்குதான் ஆலயம் கட்டப்பட வேண்டும் என்றும் வீதியெங்கும் விவாதங்கள் நடக்கின்றன. ஆனால் ஆலயம் எங்கே கட்டப்பட வேண்டும் என்று சர்ச்சைகளற்ற, சந்தேகமற்ற ஓரிடத்தை நரேந்திர மோடி தேர்ந்தெடுக்கிறார்.
‘‘மேலோன் கீழோன் பேதமில்லையே. பகைவர் இல்லையே. யாவரும் நண்பரே. மாண்புகெழுமிய வரலாறு படைப்போம். மனதுக்குள்ளே ஆலயம் அமைப்போம்’’ என்று முழங்குகிறார். நரேந்திர மோடியின் நல்லெண்ணப்படி எல்லோரும் அவரவர் மனசுக்குள் ஆலயம் கட்டத்தொடங்கிவிட்டால் சண்டை இல்லை; சர்ச்சை இல்லை; கரசேவை இல்லை; கைகலப்பு இல்லை.
இந்த சிந்தனைக் கவிதைகளுக்குள் நான் ஒரு பிரதமரை பார்க்கவில்லை. இதயம் உள்ள மனிதனைப் பார்க்கிறேன். இயற்கையின் காதலனைப் பார்க்கிறேன். நல்லிணக்கம் பேணத்துடிக்கும் ஓர் நல்லுள்ளத்தைப் பார்க்கிறேன். நர்மதை நதியை குஜராத்தின் கைரேகை என்று காணும் ஒரு கவிஞனைப் பார்க்கிறேன். அந்நாள் பிரதமர் வாஜ்பாயின் கவிதைகளைப் பிரதமர் இல்லத்தில் 2001–ம் ஆண்டு வெளியிட்டேன். அப்போது பிரதமரைப் பார்த்துச் சொன்னேன். ‘‘நீங்கள் விரும்பினால் என்றாவது ஒருநாள் முன்னாள் பிரதமர் ஆகலாம்; ஆனால் ஒருபோதும் முன்னாள் கவிஞராக முடியாது’’. அந்நாள் பிரதமருக்கு சொன்ன அதே வரியைத்தான் இந்நாள் பிரதமருக்கும் சொல்கிறேன். ஒரு கவிஞனுக்குள் இருக்கும் ஒரு தலைவன் விமர்சனத்திற்கு உட்பட்டவன். ஆனால் ஒரு தலைவனுக்குள் இருக்கும் கவிஞன் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவன். கவிஞர் நரேந்திர மோடியை வாழ்த்துகிறேன். இவ்வாறு கவிஞர் வைரமுத்து பேசினார்.