எந்த ஆதாரமும் இல்லாமல் ஊழல் புகார் கூறுகிறார்கள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்
அ.தி.மு.க. அரசு மீது சேற்றை வாரி வீச வேண்டும் என்பதற்காக எந்த ஆதாரமும் இல்லாமல் ஊழல் புகார் கூறுகிறார்கள் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
சென்னை,
சென்னை சேத்துப்பட்டு டோபிகானாவில் ரூ.28 லட்சம் மதிப்பில் சமுதாய கூடம் கட்டப்பட்டுள்ளது. இதை தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் நேற்று திறந்துவைத்தார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
முதல்–அமைச்சராக ஜெயலலிதா இருந்த போது மீனவர்களின் பிரச்சினையை தீர்க்க மத்திய அரசுக்கு எந்த அளவுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதோ அதேபோன்று தற்போதுள்ள அரசும் அழுத்தம் கொடுத்து வருகிறது. மீனவர்கள் மீதான தாக்குதல் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இந்திய கடலோர காவல்படையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி உள்ளோம். கடலில் எல்லைக்கோடு என்பது கிடையாது.
தெரிந்தோ தெரியாமலோ எல்லை மீறும் போது அவர்களை இந்திய கடற்படையினரிடம் ஒப்படைப்பது தான் சிறந்த தீர்வு. இருநாட்டு மீனவர்களுக்கும் இடையே சமரசம் ஏற்படும் வகையில் இருநாடுகளும் கலந்து பேசி விரைவில் தீர்வு ஏற்படும் என்ற நம்பிக்கை உள்ளது. இலங்கை சிறையில் உள்ள இந்திய மீனவர்களையும், அவர்களுக்கு சொந்தமான படகுகளையும் மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.அ.தி.மு.க. அரசு மீது சேற்றை வாரி வீச வேண்டும் என்பதற்காக சிலர் ஊழல் என்ற ஆயுதத்தை கையில் எடுத்துள்ளனர். தமிழகத்தை பொறுத்தமட்டில் அனைத்து டெண்டர்களும் வெளிப்படையாக மின்னணு முறையில் நடைபெறுகிறது. இதுகுறித்த அனைத்து விவரங்களும் இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.
குறைவான தொகைக்கு யார் டெண்டர் கோருகிறார்களோ அவர்களுக்கு டெண்டர் வழங்கப்படுகிறது. ஊழல் என்று கூறுபவர்களிடம் எந்த ஆதாரமும் இல்லை. ஏதாவது ஒரு குற்றச்சாட்டை கூற வேண்டும் என்பதற்காக பொதுவான குற்றச்சாட்டை சிலர் கூறி வருகின்றனர். ஊழல் குறித்து ஆதாரங்களுடன் கூறினால் அதற்கு பதில் சொல்ல கடமைபட்டுள்ளோம்.ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்துக்கான காலக்கெடுவை நீட்டிப்பது குறித்து முடிவு செய்ய இன்னும் நாட்கள் உள்ளது. தமிழக கவர்னரின் ஆய்வு என்பது வழக்கமான நடைமுறை தான். இதை பூதாகரமாக்க வேண்டியது இல்லை. மாநில சுயாட்சி விவகாரத்தில் அ.தி.மு.க. அரசு ஒருபோதும் பின்வாங்காது. விவசாயிகளை வாழ வைக்கிற அரசாக இந்த அரசு செயல்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.