ஜெயா டிவி அலுவலகம், விவேக் வீடு உள்ளிட்ட இடங்களில் விடிய விடிய வருமான வரித்துறை சோதனை
ஜெயா டிவி அலுவலகம், விவேக் வீடு உள்ளிட்ட இடங்களில் விடிய விடிய வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை,
சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் இருப்பதால், அவரது உறவினரான டி.டி.வி.தினகரன் சசிகலா அணிக்கு தலைமை தாங்கி வழிநடத்தி வருகிறார். இந்த நிலையில், சசிகலா, தினகரன், சசிகலாவின் கணவர் நடராஜன், சகோதரர் திவாகரன், அண்ணன் மனைவி இளவரசியின் மகன் விவேக் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்களின் வீடு, அலுவலகங்கள், எஸ்டேட்டுகள் உள்ளிட்ட 187 இடங்களில் நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
இந்த சோதனையின் போது ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.தமிழகத்திலும் பிற பகுதிகளிலும் ஒரே நாளில் இவ்வளவு அதிகமாக இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் பல கிடைத்து உள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னையில் ஜெயா டிவி அலுவலகம், ஜெயா டிவி சி.இ.ஓ., விவேக் வீடு, அவரது சகோதரி கிருஷ்ண பிரியா வீடுகளில் வரிமான வரித்துறை அதிகாரிகள் விடிய விடிய சோதனை நடத்தி வருகின்றனர். நாமக்கல்லில் சசிகலாவின் வக்கீல் செந்தில் வீடு, டி.என்.பி.எஸ்.சி., உறுப்பினர் பாலுசாமி வீடு, செந்திலின் தொழில் பங்குதாரர் சுப்ரமணி வீடு உள்ளிட்ட 5 இடங்களில் 2-வது நாளாக சோதனை நடைபெற்று வருகிறது.
இதேபோல் புதுச்சேரியிலுள்ள லட்சுமி ஜூவல்லர்ஸ் கடையிலும் 2-வது நாளாக சோதனை நடைபெற்று வருகிறது. நாமக்கல்லில் சோதனை நடைபெறும் இடங்களிலேயே அதிகாரிகள் ஓய்வு எடுத்தனர். மன்னார்குடியிலுள்ள திவாகரன் வீட்டிலும், திவாகரன் ஆதரவாளர்கள் 13 பேர் வீடுகளிலும் சோதனை 2-வது நாளாக இன்றும் தொடர்கிறது. கோடநாடு எஸ்டேட்டிலும் அதிகாரிகள் விடிய விடிய சோதனை நடத்தி வருகின்றனர்.