இளவரசியின் மகனுக்கு சொந்தமான திரையரங்கில் வருமான வரித்துறையினர் சோதனை

வேளச்சேரியில் இளவரசியின் மகன் விவேக் என்பவருக்கு சொந்தமான திரையரங்கில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

Update: 2017-11-09 21:30 GMT
ஆலந்தூர்

தமிழகம் முழுவதும் சசிகலாவின் குடும்பத்தினர், உறவினர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர். சென்னை வேளச்சேரியில் உள்ள பிரபல பொழுதுபோக்கு மையத்தில் இளவரசியின் மகன் விவேக் என்பவருக்கு சொந்தமான ‘லக்ஸ் சினிமாஸ்’ உள்ளது.

இந்த திரையரங்கில் 12 திரைகள் உள்ளன. இந்த திரைகளில் ஒரு காட்சியை 1,500-க்கும் அதிகமானவர்கள் அமர்ந்து சினிமா பார்க்கலாம். நேற்று காலை 7 மணியளவில் வருமான வரித்துறை அதிகாரி வேணுகோபால் தலைமையில் 7 பேர் கொண்ட குழுவினர் இந்த திரையரங்கில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டதால் நேற்று முழுவதும் சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. படத்துக்காக டிக்கெட் முன்பதிவு செய்து இருந்த ரசிகர்கள் தியேட்டருக்கு வரத்தொடங்கினார்கள்.

அவர்களிடம் திரையரங்க ஊழியர்கள், காட்சிகள் ரத்து செய்யப்பட்டதாகவும், ஆன்-லைனில் பதிவு செய்தவர்களுக்கு அந்த தொகை திருப்பி வழங்கப்படும் என்றும் கூறி அனுப்பி வைத்தனர்.

இதனால் படம் பார்க்க வேண்டும் என்ற ஆவலுடன் வந்த ரசிகர்கள், சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டதால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

இதேபோல் சென்னையை அடுத்த நீலாங்கரையில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் குடும்ப டாக்டர் சிவக்குமார் வீடு உள்ளது. அவருடைய மனைவி பிரேமா, ஜெயா டி.வி.யில் முன்னாள் இயக்குனராக இருந்ததாக கூறப்படுகிறது.

இவர்கள் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் 7 பேர் கொண்ட குழுவினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், பிரேமாவின் வங்கி கணக்கு விவரங்கள் உள்பட பல ஆவணங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும் கொட்டிவாக்கத்தில் உள்ள சசிகலாவின் உறவினர்களான டாக்டர் வெங்கடேசன் வீட்டிலும், நீலாங்கரையில் உள்ள பாஸ்கரன் வீட்டிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்