‘தேர்தல் வரும்போது நரேந்திரமோடிக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்’ திருநாவுக்கரசர் பேச்சு

மத்திய அரசின் மீது மக்கள் அதிருப்தியில் இருப்பதாகவும், தேர்தல் வரும் போது நரேந்திரமோடிக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என்றும் திருநாவுக்கரசர் கூறினார்.

Update: 2017-11-08 19:26 GMT
சென்னை,

பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் நவம்பர் 8-ந் தேதியான நேற்று கருப்பு தினமாக அனுசரித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன.

சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று காலை நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்ட தலைவர் சிவ.ராஜசேகரன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

பாடம் புகட்டுவார்கள்

பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு 2 காரணங்களை மோடி சொன்னார். ஒன்று, கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக என்றார். கருப்பு பணம் ஒழிந்ததா? இல்லை.

இரண்டாவது தீவிரவாதம் ஒழியும் என்றார். தீவிரவாதம் ஒழிந்ததா? இல்லை. கடந்த ஓர் ஆண்டில் தான் தீவிரவாதத்தால் தாக்கப்பட்டு உயிர் இழந்த ராணுவ வீரர்களின் எண்ணிக்கை அதிகம்.

ஜி.எஸ்.டி. என்னும் கந்துவட்டியால் 100-க்கு 28 சதவீதம் வட்டி கட்டி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். சாப்பிடுவதற்கு பணம் மட்டும் கட்டாமல் அபராதம் கட்டும் சூழ்நிலையில் மக்கள் இந்த அரசின் மீது அதிருப்தியில் இருக்கிறார்கள். தேர்தல் வரும்போது நரேந்திரமோடிக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.

மாற்றம் வரப்போவதில்லை

இந்தியா முழுவதும் காங்கிரசோடு தோழமை கொண்டுள்ள கட்சிகள் இணைந்து செயல்பட்டு கொண்டு இருக்கிறார்கள். மோடி என்ன வேஷம் வேண்டுமானாலும் போடலாம், கருணாநிதியை வீட்டில் சென்று பார்க்கலாம். இதனால் எல்லாம் எந்த மாற்றமும் நாட்டில் வரப்போவது இல்லை. தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி உறுதியாக இருக்கிறது. காங்கிரசோடு தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் கைகோர்த்து இன்று(நேற்று) போராட்டங்கள் நடைபெற்று கொண்டு இருக்கிறது.

ஜெயலலிதா 75 நாட்கள் மரணத்தோடு போராடிக்கொண்டிருந்த போது, பிரதமர் நரேந்திரமோடி ஒரு நாள் தனி விமானத்தில் வந்து பார்த்து இருக்கலாமே.

ஜெயலலிதாவை சிங்கப்பூருக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றிருந்தால் கூட இன்றும் 2, 3 ஆண்டுகள் அவர் உயிரோடு இருந்திருக்கலாம். எனவே பிரதமர் என்ற முறையில் ஜெயலலிதாவை வெளிநாட்டு சிகிச்சைக்கு ஏன் அழைத்து செல்லவில்லை என்பதையும் சேர்த்து நீதி விசாரணை நடத்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில், மாநில பொதுச்செயலாளர்கள் தணிகாசலம், சிரஞ்சீவி, எஸ்.சி.பிரிவு மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவி ஜான்சிராணி மற்றும் ராயபுரம் மனோ, மயிலை தரணி உள்பட ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

பல்லாவரம்

சென்னையை அடுத்த பல்லாவரத்தில் காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் ரூபிமனோகரன் தலைமை தாங்கினார். இதில் தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் தங்கபாலு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பீட்டர் அல்போன்ஸ், யசோதா ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மாவட்ட தலைவர்கள் நெடுஞ்செழியன், கேசவபெருமாள், பல்லாவரம் நகர தலைவர் தீனதயாளன், தாம்பரம் நகர பொறுப்பாளர் விஜய் ஆனந்த் உள்பட ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர்.

மாதவரம்

திருவள்ளூர் மத்திய மாவட்ட காங்கிரஸ் சார்பாக மாவட்ட தலைவர் எஸ்.மகீந்திரன் தலைமையில் மாதவரம் மண்டல அலுவலகம் எதிரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாதவரம் பகுதி தலைவர் என்.வெங்கடேசன், ஜான்போஸ்கோ, லோகநாதன் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இதேபோல் ஆவடி நகராட்சி அலுவலகம் அருகே நேற்று காலை நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு திருவள்ளூர் மாவட்ட தலைவர் ஜேம்ஸ் தலைமை தாங்கினார். இதில் பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர்.

தண்டையார்பேட்டை

சென்னை தண்டையார்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் வடசென்னை காங்கிரஸ் கமிட்டி தலைவர் எம்.எஸ்.திரவியம் தலைமையில் மத்திய அரசின் பணமதிப்பு நீக்கத்திற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் சு.திருநாவுக்கரசர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

இதற்கிடையே கூட்டத்தில் எரிந்த விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டு மெழுகுவர்த்தி ஏந்தி கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன. இக்கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் சிரஞ்சீவி, மகிளா காங்கிரஸ் மாநில தலைவி ஜான்சிராணி ஆகியோர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்