புதிய காற்றழுத்தத் தாழ்வுநிலை: தமிழகத்தில் இன்றும் மழை! தீவு போல காட்சியளிக்கும் நாகை கிராமங்கள்
தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுநிலை உருவாகியிருக்கிறது இதனால் தமிழகத்தில் இன்றும் மழை பெய்யும். தீவு போல காட்சியளிக்கும் நாகை கிராமங்கள்.
தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுநிலை உருவாகியிருக்கிறது. இதனால், தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்று அநேக இடங்களில் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
அக்டோபர் மாதம் 27-ம் தேதி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியது. அன்றிலிருந்தே தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்துவருகிறது. குறிப்பாக, கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது. தலைநகர் சென்னையில், கடந்த ஒரு வாரமாகப் பெய்துவரும் கனமழையால், தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. இந்நிலையில், இன்றும் தமிழகத்தில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. `தற்போது, இலங்கை அருகே தென்மேற்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுநிலை உருவாகியுள்ளது. இதனால், இன்றும் தமிழகத்தில் மழை பெய்யும். குறிப்பாக, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களிலும் காரைக்காலிலும் இன்று மழை பெய்யக்கூடும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாகை மாவட்டத்தில் கடந்த 30-ந் தேதி முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி போய் உள்ளது.
தற்போது நாகை மாவட் டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் நாகை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று (7-ந் தேதி) விடுமுறை அளித்து கலெக்டர் சுரேஷ்குமார் உத்தரவிட்டார்.
காடம்பாடி, சாலமண்தோட்டம், நாகூர், நாகை வாய்க்காங்கார தெரு, கூக்ஸ்ரோடு, செல்லூர் சுனாமி குடியிருப்பு, பாலையூர், வேட்டைக்காரனிருப்பு, முதலியப்பன்கண்டி, பழையாற்றங்கரை, குண்டுரான்வெளி, உம்பளச்சேரி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் மழைநீர் சூழ்ந்து தீவு போல் காணப்படுகிறது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க படகு மூலம் வெளியே சென்று வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள மேலமருதூர் ஊராட்சி மேலசேத்தியை சேர்ந்த ரவிச்சந்திரன் மகள் வைஷ்ணவரூபா (வயது22). இவர் என்ஜினீயர் வீட்டு சுவர் இடிந்து விழுந்து பலியானார்.