அமலாபால், பகத்பாசில் போல 700 வாகனங்கள் புதுச்சேரியில் பதிவு கேரள அரசுக்கு ரூ.60 கோடி இழப்பு

நடிகை அமலாபால், நடிகர் பகத்பாசில் ஆகியோரை போல, 700 வாகனங்கள் புதுச்சேரியில் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

Update: 2017-11-06 23:00 GMT
சென்னை,

நடிகை அமலாபால் சென்னையில் ரூ.1 கோடியே 15 லட்சத்துக்கு வாங்கிய பென்ஸ் சொகுசு காரை புதுச்சேரியில் பதிவு செய்து கேரளாவில் பயன்படுத்திவருவதாகவும், இதன் மூலம் ரூ.20 லட்சம் வரி ஏய்ப்பு செய்துவிட்டதாகவும் பரபரப்பு புகார் எழுந்தது. புதுவையில் போலி முகவரி கொடுத்து காரை அவர் பதிவு செய்ததாகவும் கூறப்பட்டது.

இதுபோல் நடிகை நஸ்ரியாவின் கணவரும் பிரபல மலையாள நடிகருமான பகத்பாசிலும் புதுவையில் போலி முகவரி கொடுத்து தனது பென்ஸ் காரை பதிவு செய்து வரி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டது. கேரளாவில் சாலை வரி அதிகமாக வசூலிக்கப்படுகிறது. இதை தவிர்ப்பதற்காகவே புதுவையில் கார்களை இருவரும் பதிவு செய்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டது.

அமலாபால் மறுப்பு

நடிகை அமலாபால் வரிஏய்ப்பில் ஈடுபடவில்லை என்று மறுத்து இருக்கிறார். இந்த விவகாரம் குறித்து கேரள போக்குவரத்து துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

அமலாபால், பகத்பாசில் விவகாரத்தை தொடர்ந்து கேரள போக்குவரத்து அதிகாரிகள் மாநிலம் முழுவதும் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வெளிமாநிலங்களில் பதிவு செய்துள்ள வாகனங்களை கணக்கெடுத்தனர். இதில் 700 சொகுசு கார்கள் புதுச்சேரியில் பதிவு செய்யப்பட்டு கேரளாவில் அதன் உரிமையாளர்களால் ஓட்டப்படுவது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

ரூ.60 கோடி இழப்பு

இதன் மூலம் கேரள அரசுக்கு ரூ.60 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது. புதுச்சேரியில் பதிவு செய்துள்ள வாகன உரிமையாளர்கள் அனைவருக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. எத்தனை நாட்களாக அந்த வாகனங்களை கேரளாவில் அவர்கள் பயன்படுத்தி வருகிறார்கள் என்று அந்தந்த வீடுகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகிறோம்.

விதிமீறல்களில் அவர்கள் ஈடுபட்டு இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். அமலாபாலுக்கும், பகத்பாசிலுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அவர்கள் கேரளாவில் தங்கள் கார்களை மீண்டும் பதிவு செய்ய ஒப்புக்கொண்டுள்ளனர்.

இவ்வாறு அந்த அதிகாரி கூறினார். 

மேலும் செய்திகள்