மழை–வெள்ள நிவாரண பணிகளில் அரசு அதிகாரிகளை முழுவீச்சில் ஈடுபடுத்தவேண்டும்

மழை–வெள்ள நிவாரண பணிகளில் அரசு அதிகாரிகளை முழுவீச்சில் ஈடுபடுத்தவேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Update: 2017-11-05 22:00 GMT

சென்னை,

வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு பணிகளை விரைந்து மேற்கொள்வதும், அதன் பின்னர் வெள்ள சேதத்தை மதிப்பிட்டு, நிவாரணம் மற்றும் மறுவாழ்வு பணிகளுக்கான நிதியை மத்திய அரசிடமிருந்து கேட்டு பெறுவதும் தான் தமிழக அரசின் முதன்மை கடமையாக இருக்கவேண்டும். பிரதமர் நரேந்திர மோடி நாளை (இன்று) சென்னை வரும் நிலையில், அவரிடம் நிவாரண நிதிக்கான முதல் கட்ட கோரிக்கை மனுவை தமிழக அரசு அளிக்கவேண்டும்.

ஆனால், இதுவரை அத்தகைய கோரிக்கை மனுவை தமிழக அரசு தயாரித்ததாகவோ, மழை–வெள்ள சேதங்கள் குறித்து மதிப்பிடப்பட்டதாகவோ தெரியவில்லை. மாறாக, மழை–வெள்ளத்தால் எந்த பாதிப்பும் இல்லை என்று அமைச்சர்கள் துரைக்கண்ணுவும், ஓ.எஸ்.மணியனும் கூறியிருப்பது பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும். மழை–வெள்ள நிவாரண பணிகளின் போது அமைச்சர்கள் கூறும் பொறுப்பற்ற வார்த்தைகள் மக்களை ஆறுதல் படுத்துவதற்கு மாறாக கோபப்படுத்துகின்றன.

தமிழ்நாட்டில் கடந்த 6 ஆண்டுகளில் 11 போக சாகுபடி நடந்திருக்கவேண்டும். ஆனால், 6 போக குறுவை சாகுபடி வறட்சியாலும், இரு போக சம்பா சாகுபடி வறட்சி மற்றும் வெள்ளம் காரணமாகவும் சேதம் அடைந்துள்ளன. நடப்பு சம்பா பருவ சாகுபடியாவது வெற்றிகரமாக அமையவேண்டும் என்று விவசாயிகள் வேண்டிக்கொண்டிருந்த நிலையில், அதற்கும் சேதம் ஏற்பட்டுள்ளது. மழை–வெள்ள நிவாரண பணிகளில் அரசின் செயல்பாடுகள் வருத்தமளிக்கும் நிலையில் உள்ளது.

ஆனால் போலீஸ் அதிகாரிகள் மிகச்சிறப்பான முறையில் மீட்பு பணிகளில் ஈடுபடுவது மகிழ்ச்சியளிக்கிறது. மழை–நிவாரண பணிகளை அமைச்சர்கள் பார்வையிடுவதால் எந்த நன்மையும் ஏற்படப்போவதில்லை; மாறாக அவர்களின் செயல்பாடுகளால் பாதிப்புகள் தான் ஏற்படுகின்றன. எனவே, வெள்ள பாதிப்புகள் குறித்து பேச அமைச்சர்களுக்கு வாய்ப்பூட்டு போடுவதுடன், அதிகாரிகளுக்கு முழு அதிகாரம் வழங்கி, அவர்களை முழுவீச்சில் மழை–வெள்ள நிவாரண பணிகளில் தமிழக அரசு ஈடுபடுத்தவேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்