காஞ்சீபுரம் மாவட்டத்தில் 170 ஏரிகள் நிரம்பி விட்டன; பொதுப்பணித்துறை அதிகாரி தகவல்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் 170 ஏரிகள் நிரம்பி விட்டன என பொதுப்பணித்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
காஞ்சீபுரம்,
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு பகுதிகளில் நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. காஞ்சீபுரத்தில் பொதுமக்களின் குடிநீர் மற்றும் பாசன பகுதிகளுக்கான பயன்பாட்டிற்காக உள்ள மதுராந்தகம் ஏரி நேற்று நிரம்பியது.
இதனை தொடர்ந்து அதனை சுற்றியுள்ள 21 கிராம மக்களுக்கு நேற்று வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.
இந்த நிலையில், காஞ்சீபுரம் மாவட்டத்தில் 170 ஏரிகள் நிரம்பிவிட்டன என பொதுப்பணித்துறை அதிகாரி முத்தையா தெரிவித்துள்ளார். மதுராந்தகம், ஸ்ரீபெரும்புதூர், செங்கல்பட்டு கொளவாய் ஏரி உள்ளிட்டவை முழு கொள்ளளவை எட்டியுள்ளன. 202 ஏரிகள் 75 சதவீதம் நிரம்பியுள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.
அனைத்து ஏரிகளும் பாதுகாப்பான நிலையில் உள்ளன. அதனால் பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.