பேரறிவாளனின் சிறைவிடுப்பை நீட்டிக்க வேண்டும் தமிழக அரசுக்கு சீமான் வலியுறுத்தல்

பேரறிவாளனுக்கு வழங்கப்பட்டுள்ள சிறைவிடுப்பை நீட்டிக்கச் செய்ய வேண்டும் என்று அவரது தாய் அற்புதம்மாள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்திருக்கிறார்.

Update: 2017-10-22 19:10 GMT
சென்னை,

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பேரறிவாளனுக்கு வழங்கப்பட்டுள்ள சிறைவிடுப்பை நீட்டிக்கச் செய்ய வேண்டும் என்று அவரது தாய் அற்புதம்மாள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்திருக்கிறார். இக்கோரிக்கையை கனிவோடு பரிசீலிக்க வேண்டியது தமிழக அரசின் இன்றியமையாத கடமையாகும். தள்ளாத வயதிலும் தனது மகனின் விடுதலைக்காக தமிழக வீதிகள்தோறும் ஓடிச்சென்று தன் மகனுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதிகேட்டு நிற்கிறார் அற்புதம்மாள். அற்புதம்மாளும், பேரறிவாளனும் முன்னெடுத்த 26 ஆண்டு கால போராட்டத்திற்கும், ஏற்பட்ட பெருங்காயத்திற்கும் சிறுமருந்திடுவது போல இரு மாதங்கள் தமிழக அரசு சிறைவிடுப்பு அளிக்கப்பட்டிருப்பதை மனதார வரவேற்கிறேன். சிறைவிடுப்பு என்பது ஒரு சலுகை அல்ல, அது ஒரு சிறைவாசியின் தார்மீக உரிமை.

எதற்காக பேரறிவாளனுக்கு விடுப்பு தரப்பட்டதோ அதற்கான காரணம் இன்னும் அப்படியே இருப்பதால் சிறைவிடுப்பைத் தமிழக அரசானது நீட்டிக்கச் செய்வது தான் இந்நேரத்தில் முன்னெடுக்கிற சிறந்த நடவடிக்கையாக இருக்க முடியும். எனவே, விடுதலை அடையும் வரை பேரறிவாளனின் சிறைவிடுப்பை நீட்டிக்க செய்ய வேண்டும் என தமிழக அரசை கோருகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்