டி.ஜி.பி. அலுவலகத்தில் காவலர் வீர வணக்க நாள் அனுசரிப்பு உயர் போலீஸ் அதிகாரிகள் பங்கேற்பு

சென்னையில் உள்ள டி.ஜி.பி. அலுவலகத்தில் நேற்று காவலர் வீர வணக்க நாள் அனுசரிக்கப்பட்டது. இதில் உயர் போலீஸ் அதிகாரிகள் பங்கேற்றனர்.

Update: 2017-10-21 20:30 GMT
சென்னை,

1959-ம் ஆண்டு அக்டோபர் 21-ந்தேதி அன்று லடாக் பகுதியில் ஹாட் ஸ்பிரிங்ஸ் என்ற இடத்தில் சீன ராணுவம் நடத்திய திடீர் தாக்குதலில் மத்திய பாதுகாப்பு படை போலீசார் 10 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, நாடு முழுவதும் பல்வேறு சம்பவங்களில் பணியின்போது வீர மரணம் அடைந்த போலீசாருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21-ந்தேதி ‘காவலர் வீர வணக்க நாள்’ அனுசரிக்கப்படுகிறது.

அதன்படி தமிழக போலீஸ் டி.ஜி.பி. அலுவலக வளாகத்தில் உள்ள காவலர் நினைவுச்சின்னத்தில் ‘காவலர் வீர வணக்க நாள்’ நேற்று அனுசரிக்கப்பட்டது. இதில் கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 1-ந்தேதி முதல் கடந்த ஆகஸ்டு 31-ந்தேதி வரையிலான ஓராண்டில் நாடு முழுவதும் பணியின் போது வீர மரணம் அடைந்த 379 போலீசாருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

தமிழக டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் முதலில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரை தொடர்ந்து மேற்கு வங்க மாநில முன்னாள் கவர்னரும், முன்னாள் டி.ஜி.பி. யுமான எம்.கே.நாராயணன், முப்படையை சேர்ந்த உயர் அதிகாரிகள் வி.வித்யான்சு ஸ்ரீவத்ஸவா, என்.நாகராஜன், ராஜன் பர்கோத்ரா, தீயணைப்பு- மீட்பு படை இயக்குனர் கே.பி. மகேந்திரன், போக்குவரத்து ஊழல் தடுப்பு பிரிவு டி.ஜி.பி. சங்காராம் ஜாங்கிட், மாநில மனித உரிமை ஆணையத்தின் டி.ஜி.பி. செ.கி.காந்திராஜன், சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், கூடுதல் டி.ஜி.பி.க்கள் ஸ்ரீலட்சுமி பிரசாத், அசுதோஸ் சுக்லா, ந.தமிழ்செல்வன், சென்னை கலெக்டர் வி.அன்புசெல்வன் உள்பட உயர் அதிகாரிகளும், ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரிகளும் அஞ்சலி செலுத்தினர். துப்பாக்கி குண்டுகள் முழக்க மரியாதையும் செலுத்தப்பட்டது.

போலீஸ்துறையில் சிறப்பாக பணியாற்றியதற்காக பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மாதேவி, சேலையூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பங்குராஜ், பெண் போலீஸ் ஏட்டு தில்ஷாத் பேகம் ஆகிய 3 பேரும் நினைவு சின்னத்தில் அஞ்சலி செலுத்துவதற்கு அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்