டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவதில் அரசு தோல்வி அடைந்துவிட்டது
‘‘டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவதில் அரசு தோல்வி அடைந்துவிட்டது’’, என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.
சென்னை,
இந்த நிகழ்ச்சியில் பா.ம.க. மாநில துணை பொதுச்செயலாளர் ஏ.கே.மூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள், பசுமை தாயகம் அமைப்பின் நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
இதனைத்தொடர்ந்து டாக்டர் அன்புமணி ராமதாஸ் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
டெங்கு காய்ச்சல் குறித்து விழிப்புணர்வுகளை மக்களிடம் கொண்டுசெல்ல இந்த அரசு தவறிவிட்டது. அதுமட்டுமல்லாமல் அரசு ஆஸ்பத்திரிகளில் யாராவது மர்ம காய்ச்சல் என்று வந்தால், அவர்களுக்கு பரிசோதனை செய்யவேண்டாம் என்று கூறியுள்ளனர். பலி எண்ணிக்கை உயர்ந்தால் அவப்பெயர் வந்துவிடும் என்பதால் இப்படி செய்கிறார்கள். இது மருத்துவ நெறிமுறைகளுக்கு எதிரானது.பிரச்சினை இருந்தால் அதனை வெளிப்படையாக ஏற்றுக்கொண்டு தீர்வு காணவேண்டும். ஆனால் இந்த அரசு உண்மைகளை மூடி மறைக்கிறது. இதில் எந்த பிரயோஜனமும் இல்லை. டெங்கு நோய் குறித்து பா.ம.க. சார்பில் தொடர்ந்து விழிப்புணர்வு மேற்கொண்டு வருகிறோம். அரசு செய்யவேண்டியதை நாங்கள் செய்துவருகிறோம்.
தமிழகத்தில் 11 ஆயிரத்து 500 பேருக்கு மட்டுமே டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருந்ததாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகிறார். ஆனால் 30 ஆயிரம் பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 200–க்கும் அதிகமானோர் உயிரிழந்து உள்ளனர். இதையெல்லாம் சுகாதாரத்துறை மறைக்கிறது. டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவதில் இந்த அரசு தோல்வி அடைந்துள்ளது.குட்கா ஊழலில் சுகாதாரத்துறை அமைச்சரும், போலீஸ் உயர் அதிகாரிகளும் தான் சூத்திரதாரிகள் என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. ஆனாலும் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. இதுகுறித்து யாரும் கேள்வி எழுப்பிவிடக்கூடாது என்பதற்காக குட்கா ஊழல் தொடர்பான விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது என்றும், உரிய ஆதாரங்கள் இருக்கும் பட்சத்தில் அமைச்சர் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்படும் என்றும் காவல்துறை தெரிவித்து உள்ளது. இது எதிர்க்கட்சிகள் வாயை மூடும் தந்திரமே தவிர, உண்மையான அக்கறை அல்ல.
புலிகளை விடுத்து எலிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதின் மூலம், போலீசார் விசாரணையில் உண்மை குற்றவாளிகள் தப்பித்துவிடுவார்கள் என்பது உண்மையாகி வருகிறது. எனவே உண்மை வெளிவர வேண்டுமென்றால் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் 2 பேர் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யவேண்டும். அதோடு சி.பி.ஐ. இந்த வழக்கை எடுத்து விசாரிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்