செல்லூர் ராஜூ கூறியது அவரது தனிப்பட்ட கருத்து: அ.தி.மு.க. அரசு மீண்டும் அமைய சசிகலா காரணம் இல்லை

‘‘அ.தி.மு.க. அரசு மீண்டும் அமைய சசிகலா காரணம் இல்லை’’, என்றும், ‘‘செல்லூர் ராஜூ கூறியது அவரது தனிப்பட்ட கருத்து’’, என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

Update: 2017-10-09 22:45 GMT

சென்னை,

தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சென்னை பட்டினப்பாக்கத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு ஜெயக்குமார் அளித்த பதில்களும் வருமாறு:–

கேள்வி:– இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது?

பதில்:– ஜெயலலிதா அரசின் வற்புறுத்தல், தொடர் முயற்சி போன்றவற்றுடன் மத்திய அரசின் தலையீடு காரணமாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இன்றைய தினம் (நேற்று) கூட பேச்சுவார்த்தை நடந்துள்ளது. இந்தியா–இலங்கை நாடுகளை சேர்ந்த மத்திய அரசு இயக்குனர்கள், செயலாளர்கள், வெளியுறவுத்துறை அதிகாரிகள் மற்றும் கடற்படை அதிகாரிகள் டெல்லியில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

எனவே நமது மீனவர்களுக்கும், அவர்கள் பயன்படுத்தும் படகுகளுக்கும் உரிய பாதுகாப்பு அளிக்கவேண்டும் என்பது தான் நமது அரசின் தலையாய கொள்கை.

கேள்வி:– இந்த அரசு அமைய முக்கிய காரணம் சசிகலாதான்... என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கருத்து தெரிவித்து உள்ளாரே? இந்த கருத்துக்கு நீங்கள் உடன்படுகிறீர்களா?

பதில்:– இந்த அரசு ஜெயலலிதா அமைத்தது. இது உலகத்துக்கே தெரிந்த வி‌ஷயம். தனது உடல்நிலை பாதிக்கப்பட்ட சூழ்நிலையிலும் கூட, எம்.ஜி.ஆர். அரசு தமிழகத்தில் அமையவேண்டும் என்று பட்டிதொட்டி எல்லாம் சுற்றிசுற்றி வந்து எங்களுக்கெல்லாம் வாக்குகள் கேட்ட அந்த தியாக உள்ளம் கொண்ட ஜெயலலிதா ஏற்படுத்தி தந்தது தான் இந்த அரசு. இந்த அரசு அமைய வேறு யாரும் காரணம் இல்லை. செல்லூர் ராஜூவின் தனிப்பட்ட கருத்துக்குள் செல்ல நான் விரும்பவில்லை.

கேள்வி:– கூவத்தூரில் எம்.எல்.ஏ.க்களை ஒன்றுதிரட்டி இந்த ஆட்சி கலையாமல் பாதுகாத்ததே சசிகலா தான் என்றும் கூறுகிறார்களே?

பதில்:– இதனை நான் கண்டிப்பாக மறுக்கிறேன். எந்தநிலையில் இருந்தாலும் சரி, ஜெயலலிதாவால் தேர்வு செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் அனைவருமே முழுமையான அளவுக்கு ஒன்றுபட்டு, எந்த விதத்திலும் ஜெயலலிதா அரசுக்கு பாதிப்பு ஏற்பட்டுவிடக்கூடாது, கலைந்து விடக்கூடாது, எதிரிகளுக்கு இடம் கொடுத்துவிடக்கூடாது, குறிப்பாக தி.மு.க.வுக்கு இடம் கொடுத்து விடக்கூடாது என்ற அடிப்படையிலே எல்லோரும் ஒருமனதுடன் இருந்தோம்.

நான் கூட இன்றைக்கு மாறுபட்ட கருத்தில் தான் இருக்கிறேன். ஜெயலலிதா அரசு அமைய நானும் தான் கஷ்டப்பட்டேன். அதுக்காக சசிகலா தான் காரணம் என்று சொல்ல முடியாது.

கேள்வி:– ‘செல்லூர் ராஜூ மனசாட்சி உள்ளவர்’, என்று டி.டி.வி.தினகரன் கூறியுள்ளாரே?

பதில்:– மனசாட்சி பற்றி யார் சொல்வது? டி.டி.வி.தினகரன் கூறுவது, சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது. அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்தார். தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்பார்கள். இன்றைக்கு நடராஜனுக்காக தசை ஆடுகிறதே... அந்த தசை ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் இருக்கும்போது ஆடியிருக்க வேண்டும்.

இந்த கேள்வியை தமிழக மக்கள் கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள். சசிகலா குடும்பம் ஜெயலலிதாவுக்கு செய்த துரோகம் குறித்து மக்கள் கேள்வி எழுப்பி கொண்டிருக்கிறார்கள். ஜெயலலிதா உடல்நலம் தேறி வரவேண்டும் என்று தமிழகம் முழுவதும் மக்கள் பிரார்த்தனை செய்தார்கள். ஆனால் இந்த குடும்பம் ஒரு பிரார்த்தனையாவது செய்ததா? ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் தனது கணவரை பார்க்க வரும் சசிகலாவை மேளதாளத்துடன் வரவேற்கிறார்கள். இதை என்னவென்று சொல்வது?

கேள்வி:– செல்லூர் ராஜூ மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?

பதில்:– அவரது கருத்தை தெளிவாக சொல்லிவிட்டார். ‘‘நான் ‘ஸ்லீப்பர் செல்’ இல்லை’’, என்றும் கூறியிருக்கிறார். ஜெயலலிதா அரசு தொடரவேண்டும் என்பது தான் அவரது பேச்சிலும் தெரிகிறது. எனவே இந்த அரசு தொடருவதற்கு செல்லூர் ராஜூ நிச்சயம் ஒத்துழைப்பு தருவார்.

கேள்வி:– சசிகலா வருகை அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதாலேயே, அரசு நிபந்தனைகள் விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறதே?

பதில்:– அப்படி எதுவும் கிடையாது.  மேற்கண்டவாறு அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்தார்.

மேலும் செய்திகள்