கம்போடியாவில் தற்கொலை செய்து கொண்ட ரவுடி ஸ்ரீதரின் மகள் போலீசில் மனு
கம்போடியாவில் தற்கொலை செய்து கொண்ட ரவுடி ஸ்ரீதரின் உடலை இந்தியா கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அவரது மகள் தனலட்சுமி போலீசில் மனு அளித்துள்ளார்.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் திருப்பருத்திகுன்றத்தை சேர்ந்தவர் பிரபல ரவுடி ஸ்ரீதர் (வயது 49). இவருக்கு குமாரி என்ற மனைவியும், ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். இவர் மீது காஞ்சீபுரம் மற்றும் சென்னை போலீஸ் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, ஆள்கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. இவர் துபாய், இலங்கை போன்ற வெளிநாடுகளில் பதுங்கி உள்ளதாக கூறப்பட்டது.
ரவுடி ஸ்ரீதரின் பாஸ்போர்ட்டு இந்த ஆண்டு காலாவதியாவதையொட்டி புதுப்பித்து கொள்வதற்கு சென்னை வந்தால் அவரை பிடிக்க சென்னை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் என்.ஸ்ரீநாத், விமான நிலைய போலீசார் மற்றும் அதிகாரிகளை உஷார் படுத்தி வந்தார்.
இந்த நிலையில் ரவுடி ஸ்ரீதர் கம்போடியா நாட்டில் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியானது. அவரது மகள் தனலட்சுமி (23) கம்போடியா சென்று தற்கொலை செய்தது தனது தந்தை ஸ்ரீதர்தான் என உறுதி செய்தார்.
அதன் பின்னர் ஸ்ரீதரின் மகள் தனலட்சுமி கம்போடியாவில் இருந்து காஞ்சீபுரம் வந்தார். பின்னர் அவர் காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி மற்றும் மாவட்ட கலெக்டர் பொன்னையாவை சந்தித்து கோரிக்கை மனு கொடுக்க சென்றார்.
அப்போது போலீஸ் சூப்பிரண்டு இல்லாததால் தனிப்பிரிவு இன்ஸ்பெக்டரிடமும், கலெக்டர் இல்லாததால் மாவட்ட வருவாய் அதிகாரியிடமும் மனுவை அளித்தார். அந்த மனுவில் கூறியுள்ளதாவது:-
எனது தந்தை ஸ்ரீதர் மீது சில குற்ற வழக்குகள் போடப்பட்டு நிலுவையில் உள்ளன. அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்க காவல்துறை முயற்சி செய்தபோது அவர் தலைமறைவானார். கடந்த 1.8.2016 அன்று எனது தந்தை ஸ்ரீதர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகாததால் அவரை காஞ்சீபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம்-1 தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது.
அதன் பின்னர் அவர் எங்கு இருந்தார் என்ற விவரம் எனக்கோ, எனது குடும்பத்தினருக்கோ தெரியாமல் இருந்தது. கடந்த 4.10.2017 எனது தம்பி சந்தோஷ்குமார் லண்டனில் இருந்து போன் செய்து அப்பாவின் உடலை கம்போடியாவில் உள்ள கீமா மருத்துவமனையில் வைத்து இருப்பதாக அப்பாவுடன் இருக்கும் சமையல்காரர் தேவேந்திரன் போனில் தெரிவித்தாக என்னிடம் கூறினார்.
உடனே நான், எங்கள் வக்கீல்கள் புருஷோத்தம்மன், விநாயக விஷ்ணு ஆகியோருடன் கம்போடியாவில் உள்ள கீமா மருத்துவமனைக்கு சென்று பார்த்தோம். தற்போது வரை எனது தந்தையின் உடல் அங்கேயே உள்ளது.
அவர் இறந்ததை உறுதி செய்யும் வகையில் கம்போடியாவில் உள்ள கீமா மருத்துவமனை சான்றிதழும் வழங்கியுள்ளது. எனவே எனது தந்தையின் உடலை இந்தியாவுக்கு கொண்டுவந்து நல்லமுறையில் இறுதிச்சடங்கு செய்ய நானும் என் குடும்பத்தாரும் எண்ணுகிறோம்.
எனவே எனது தந்தை ஸ்ரீதரின் உடலை இந்தியாவிற்கு கொண்டுவர முயற்சி செய்து வருகிறேன். அதனால் என் தந்தையின் உடலை இந்தியாவிற்கு கொண்டு வந்து இறுதிச் சடங்கு செய்ய தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.
இது குறித்து மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி நூர்முகமதுவிடம் கேட்டதற்கு என்னிடம் ஸ்ரீதர் மகள் தனலட்சுமி கொடுத்த மனுவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு அனுப்பியுள்ளேன் என்று தெரிவித்தார்.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி விடுப்பில் உள்ளதால் நாளை (திங்கட்கிழமை) தான் இந்த மனுமீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பது தெரியவரும்.