உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்: மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட நிர்வாகிகள் மகிழ்ச்சி

உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து, உறுப்பினர் படிவத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி கையெழுத்திட்டார்.

Update: 2017-10-06 23:00 GMT
சென்னை,

உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து, உறுப்பினர் படிவத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி கையெழுத்திட்டார். அதை பார்த்த, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட நிர்வாகிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தி.மு.க.வில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை உறுப்பினர் சேர்க்கை நடத்தப்பட்டு, கட்சியில் அனைத்து பதவிகளுக்கும் தேர்தல் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், இப்போது 15-வது அமைப்பு தேர்தல் நடத்தப்பட இருக்கிறது. அதை முன்னிட்டு, உறுப்பினர் சேர்க்கை நடந்து வருகிறது.

கட்சியில் ஏற்கனவே உறுப்பினர்களாக உள்ளவர்கள், விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தங்களது உறுப்பினர் அட்டையை புதுப்பித்து வருகின்றனர். இந்த நிலையில், தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உறுப்பினர் அட்டையை புதுப்பிக்க நேற்று முன்தினம் சென்னை கோபாலபுரம் இல்லத்திற்கு கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நிர்வாகிகளுடன் சென்றார்.

அங்கு உடல்நலக் குறைவால் ஓய்வெடுத்து வரும் கருணாநிதியிடம், உறுப்பினர் படிவத்தை கொடுத்து, கட்சியில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வரும் தகவலை தெரிவித்தனர். மேலும், தங்களது உறுப்பினர் அட்டையை புதுப்பித்துக்கொள்ள படிவத்தில் கையெழுத்திடுமாறும் கேட்டுக்கொண்டனர்.

தி.மு.க. தலைவர் கருணா நிதியும் மகிழ்ச்சி அடைந்து, சிரித்துக்கொண்டே உறுப்பினர் படிவத்தில் குறிப்பிட்ட இடத்தில் கையெழுத்து போட்டார். இதைப் பார்த்த, மு.க.ஸ்டாலின், அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ., கருணாநிதியின் மகன் மு.க.தமிழரசு, மகள் செல்வி, மருமகள் மோகனா தமிழரசு உள்ளிட்டோர் மகிழ்ச்சி அடைந்தனர்.

கருணாநிதியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டாலும், அவரது தொண்டையில் மாட்டப்பட்டுள்ள ‘டிரக்கியாஸ்டமி’ குழாய் இன்னும் அகற்றப்படவில்லை. அதனால், அவரால் பேசவும் முடியவில்லை. டிசம்பர் மாதம் அந்த குழாய் அகற்றப்படும் என தெரிகிறது. அதன் பிறகு, கருணாநிதி சகஜமாக பேசுவார் என்று அவரை சந்தித்தவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்