5 நாள் பரோலில் சசிகலா சென்னை வந்தார் ‘யாரையும் சந்திக்கக்கூடாது: அரசியலில் ஈடுபட தடை’

5 நாள் பரோலில் சென்னை வந்த சசிகலாவுக்கு, அரசியல் நடவடிக்கையில் ஈடுபடக் கூடாது, யாரையும் சந்திக்கக்கூடாது என்பது உள்ளிட்ட கடும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டு உள்ளன.

Update: 2017-10-07 00:15 GMT
பெங்களூரு,

சொத்து குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்ததை தொடர்ந்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் கடந்த பிப்ரவரி 15-ந் தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

கடந்த பிப்ரவரி மாதம் முதல் அவர்கள் பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்து வருகின்றனர். இந்த நிலையில் உடல்நல குறைவு காரணமாக சென்னையில் உள்ள குளோபல் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட சசிகலாவின் கணவர் நடராஜனின் உடல்நிலை மோசமாக இருப்பதாக டாக்டர்கள் அறிவித்து இருந்தனர். நடராஜனுக்கு சிறுநீரகம், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்ளது.

இதற்கிடையே, ஆஸ்பத்திரியில் உள்ள தனது கணவரை பார்க்க 15 நாட்கள் ‘பரோல்’ வழங்குமாறு கோரி சசிகலா சார்பில் அவரது வக்கீல்கள் சிறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில் தொழில்நுட்ப ரீதியாக சில குறைபாடுகள் இருப்பதாகவும், அதை சரிசெய்து மீண்டும் புதிய மனுவை தாக்கல் செய்யும்படியும் கூறி அதை சிறை அதிகாரிகள் தள்ளுபடி செய்தனர்.

இதையடுத்து சசிகலாவின் வக்கீல்கள் மறுநாள் அதாவது கடந்த 4-ந் தேதி உரிய ஆவணங்கள் மற்றும் விவரங்களுடன், சசிகலாவுக்கு அவசரமாக 15 நாட்கள் ‘பரோல்’ வழங்குமாறு கோரி சிறை அதிகாரிகளிடம் புதிய மனுவை தாக்கல் செய்தனர்.

அந்த மனுவை ஏற்றுக்கொண்ட சிறை அதிகாரிகள் சசிகலாவுக்கு அவசர ‘பரோல்’ வழங்க முடிவு செய்தனர். இதையடுத்து சசிகலா சென்னையில் தங்குவதற்கு தடையில்லா சான்றிதழ் வழங்குமாறு கோரி சென்னை நகர போலீஸ் கமிஷனருக்கு கர்நாடக சிறைத்துறை அதிகாரிகள் ஒரு கடிதம் எழுதினர். இதற்கு அனுமதி வழங்கி சென்னை மாநகர போலீஸ் சார்பில் மின்னஞ்சல் மூலமாக நேற்று காலையில் தடையில்லா சான்றிதழ் அனுப்பிவைக்கப்பட்டது. சில கட்டுப்பாடுகளுடன் அந்த சான்றிதழை சென்னை போலீஸ் வழங்கி இருக்கிறது.

அதை பெற்றுக்கொண்ட பெங்களூரு சிறை அதிகாரிகள், சசிகலாவுக்கு அவசரமாக 5 நாட்கள் ‘பரோல்’ வழங்க முடிவு செய்தனர். அதாவது 7-ந் தேதி (இன்று) முதல் 11-ந் தேதி வரை சசிகலாவுக்கு ‘பரோல்’ வழங்கப்பட்டுள்ளதாக அந்த அதிகாரிகள் நேற்று பகல் 12.30 மணி அளவில் அறிவித்தனர். சசிகலாவுக்கு பரோல் உத்தரவாத தொகையாக ரூ.1,000 செலுத்தப்பட்டு உள்ளது.

5 நாட்கள் ‘பரோல்’ வழங்கி இருப்பது பற்றி சசிகலாவுக்கு சிறை அதிகாரிகள் தெரிவித்தனர். அதன் பிறகு சிறை ஆஸ்பத்திரியில் சசிகலாவுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் அவரது உடல்நிலை சீராக இருப்பது தெரியவந்தது.

233 நாள் சிறை வாசத்துக்கு பின் நேற்று மதியம் 2.55 மணிக்கு சசிகலா சிறையில் இருந்து முன்பக்க பிரதான நுழைவு வாயில் வழியாக வெளியே வந்தார். அப்போது அங்கு கூடி இருந்த அவரது ஆதரவாளர்கள் கோஷமிட்டனர்.

சசிகலா 5 நாட்கள் ‘பரோல்’ காலத்திற்கு பிறகு 12-ந் தேதி மாலை 5 மணிக்குள் பெங்களூரு சிறைக்கு திரும்ப வேண்டும் என்று சிறை அதிகாரிகள் அவருக்கு உத்தரவிட்டு உள்ளனர்.

கிருஷ்ணகிரி, பர்கூர் வழியாக சசிகலா நேற்று இரவு சென்னை வந்தார். இரவு 10 மணி அளவில் தியாகராயநகர் அபிபுல்லா சாலையில் உள்ள இளவரசியின் மூத்த மகள் விஷ்ணுபிரியாவின் வீட்டுக்கு வந்து சேர்ந்தார். அங்கு அவரை ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

சசிகலாவுக்கு சில கடுமையான நிபந்தனைகளுடன் ‘பரோல்’ வழங்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக கர்நாடக சிறைத்துறை சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

* இந்த அவசர ‘பரோல்’ நாட்களில் நீங்கள் (சசிகலா) உங்களின் கணவர் அனுமதிக்கப்பட்டுள்ள ஆஸ்பத்திரிக்கு மட்டுமே செல்ல வேண்டும். நீங்கள் மனுவில் குறிப்பிட்டுள்ள வீட்டில் தான் தங்க வேண்டும்.

* நீங்கள் தங்கும் வீட்டிலோ அல்லது ஆஸ்பத்திரியிலோ யாரையும் சந்திக்கக்கூடாது.

* நீங்கள் இந்த நாட்களில் அரசியல் நடவடிக்கையிலோ அல்லது கட்சி நடவடிக்கைகளிலோ ஈடுபடக்கூடாது. பொது நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க கூடாது.

* அச்சு மற்றும் காட்சி ஊடகங்களுடன் கலந்துரையாடக்கூடாது.

* காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே மருத்துவமனையில் இருக்க வேண்டும்.

* இந்த நாட்களில் ஏதாவது அவசரமாக வெளியே செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டால், உள்ளூர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டரின் முன்அனுமதியை பெற வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்