அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ்கள் மீது கடும் நடவடிக்கை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேட்டி

கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ்கள் மீது மிகக்கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.

Update: 2017-10-06 22:15 GMT
சென்னை,

தமிழ்நாடு போக்குவரத்துதுறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேற்று கோட்டையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

கடந்த முறை தீபாவளி, பொங்கல் பண்டிகை காலங்களில் போக்குவரத்து வசதி மக்களின் வரவேற்பை பெற்றிருந்தது. எனவே மேலும் சிறப்பாக வருகிற தீபாவளியை யொட்டி பயணம் செய்யும் பொதுமக்களுக்கு வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை கூறியிருந்தார்.

அதன்படி கடந்த வாரம் போக்குவரத்துதுறை செயலாளர், போக்குவரத்து துறை அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் ஆகியோர் அடங்கிய கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தின்படி தீபாவளி பண்டிகைக்கு சிறப்பு போக்குவரத்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முன்பெல்லாம் கோயம்பேடு பஸ்நிலையத்தில் இருந்து பஸ் புறப்பட்டு அது சென்னை நகரை தாண்ட 3 அல்லது 4 மணிநேரம் ஆனது. ஆனால் இப்போது 1 மணிநேரம் அல்லது அதிக பட்சம் 1½ மணி நேரத்தில் சென்று விட முடியும். அந்த அளவுக்கு போக்குவரத்து நெரிசலை குறைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

தீபாவளியை யொட்டி அனைத்து டோல் கேட்டுகளிலும் போக்குவரத்து கழக அதிகாரிகள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். ஆன்லைனில் ஆம்னி பஸ்களுக்கான கட்டணம் அதிகமாக வெளியிட்டு இருந்தால் அது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

கட்டணம் அதிகமாக வசூலிக்கும் ஆம்னி பஸ்கள் மீது மிகக்கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

மழைக்காலங்களில் ஒழுகும் அரசு போக்குவரத்து கழக பஸ்களின் ஓட்டைகள் சரி செய்யப்பட்டுள்ளன.

டிக்கெட்டுகள் முன்பதிவுக்காக மொத்தம் 29 சிறப்பு கவுன்ட்டர்கள் திறக்கப்பட்டுள்ளன.

தீபாவளி பண்டிகைக்காக 15-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை பகல் 2 மணி முதல் இரவு 2 மணி வரை கார்களில் செல்பவர்கள் சென்னையில் இருந்து தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்லாமல், மதுரவாயல், பூந்தமல்லி, ஸ்ரீபெரும்புதூர் வழியாக சென்றால் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கலாம்.

இவ்வாறு அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்