கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி

கிருஷ்ணகிரி அருகே கன மழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலியானார்கள்.

Update: 2017-10-05 21:45 GMT
கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி அருகே உள்ள தண்டேகுப்பத்தை சேர்ந்தவர் ராதா (வயது 75). இவருக்கு சொந்தமாக ஓட்டு வீடு உள்ளது. அதன் அருகில் அவருக்கு குடிசை வீடும் உள்ளது. குடிசை வீட்டில் நேற்று முன்தினம் இரவு ராதா, மகள் புஷ்பா (38), மகன் வழி பேரன்கள் வசந்தகுமார் (16), பகவதி (13), பேத்தி முல்லை (8) ஆகியோருடன் தூங்கிக் கொண்டிருந்தார்.

கிருஷ்ணகிரி பகுதியில் நேற்று முன்தினம் கனமழை பெய்தது. இதனால் நேற்று அதிகாலை ராதாவின் ஓட்டு வீட்டுச்சுவர் இடிந்து குடிசையின் மீது விழுந்தது.

இதில் ராதா உள்பட 5 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்தனர். ராதாவின் மகன் காளிரத்தினம் ஓட்டு வீட்டின் ஓரமாக படுத்திருந்தார். வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 5 பேரும் பலியானதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். 5 பேரின் உடல்களையும் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பலியான பகவதி 8-ம் வகுப்பும், முல்லை 3-ம் வகுப்பு படித்து வந்தனர். வசந்தகுமார் 10-ம் வகுப்பு படித்து விட்டு வேலைக்கு சென்று வந்தார். மகன் காளிரத்தினம் ஓட்டு வீட்டில் ஒரு ஓரமாக படுத்து இருந்ததாலும், மற்றொரு மகன் செல்வம் பெயிண்டிங் வேலைக்கு வெளியூர் சென்று விட்டதாலும் உயிர் தப்பினர்.

மேலும் செய்திகள்