தமிழகத்தை நோக்கி 2 புயல்கள் உண்மை நிலை என்ன?

தமிழகத்தை 2 புயல்கள் தாக்க உள்ளதாக கூறுவது வதந்தி என தமிழ்நாடு வெதர்மேன் தனது பேஸ்புக்கில் கூறி உள்ளார்.

Update: 2017-10-05 05:55 GMT
தமிழகத்தை இந்த மாதம் இரண்டு புயல்கள் தாக்க உள்ளதாக டெல்லியில் உள்ள இந்திய வானிலை மையம் கூறியுள்ளது. தற்போது தென்மேற்கு பருவமழை நிறைவடையும் சூழ்நிலையில், இம்மாத இறுதியில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது.

 அக்டோபர் 7 மற்றும் 12 தேதிகளில் வங்க கடலில் இரண்டு புயல்கள் உருவாக வாய்ப்புள்ளது என்றும் முதலாவது புயல் 11ஆம் தேதி அன்றும்  2ஆவது புயல் 15 முதல் 20ஆம் தேதிக்கு இடைப்பட்ட நாட்களிலும் கரையைக் கடக்கும் வாய்ப்பு உள்ளது என   கடந்த சில மணிநேரங்களாக பெரும்பாலான ஊடகங்களிலும், சமூக இணையதளங்களிலும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

ஆனால் இந்த செய்தி தவறானது என்றும், இந்த வதந்தியை யாரும் நம்ப வேண்டாம் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் தனது பேஸ்புக்கில் கூறி உள்ளார்.   மேலும் வடகிழக்கு பருவமழை இன்னும் ஆரம்பிப்பதற்கான அறிகுறி தெரியவில்லை என்றும், ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திரா பகுதிகளில் தாழ்வழுத்தம் உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் ஆனால் அது புயலாக மாற வாய்ப்பில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இதுபோன்ற செய்தியை ஊடகங்கள் வெளியிடும் முன்னர் சம்பந்தப்பட்டவர்களிடம் உறுதி செய்து வெளியிட வேண்டும் என்றும் அவர் ஊடகங்களை கேட்டுக்கொண்டுள்ளார். 


மேலும் செய்திகள்