அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட துரைமுருகன் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்
தி.மு.க. முதன்மை செயலாளர் துரைமுருகன் எம்.எல்.ஏ., கடந்த வாரத்தில் வெளிநாட்டு நிகழ்ச்சிகள் சிலவற்றில் கலந்துவிட்டு, கடந்த ஓரிரு நாட்களுக்கு முன் தமிழகம் திரும்பினார்.
சென்னை,
தி.மு.க. முதன்மை செயலாளர் துரைமுருகன் எம்.எல்.ஏ., கடந்த வாரத்தில் வெளிநாட்டு நிகழ்ச்சிகள் சிலவற்றில் கலந்துவிட்டு, கடந்த ஓரிரு நாட்களுக்கு முன் தமிழகம் திரும்பினார். அதைத் தொடர்ந்து அவர் சளித்தொல்லையால் அவதிப்பட்டு வந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவு அவருக்கு சளித்தொல்லை காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
அதைத் தொடர்ந்து அவர் நேற்று அதிகாலை சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில், கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் குழு தீவிர சிகிச்சை அளித்தது.
ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த துரைமுருகனை, தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை 11.30 மணியளவில் நேரில் சென்று நலம் விசாரித்தார். துரைமுருகன் உடல்நிலை குணம் அடைந்து நேற்று இரவு வீடு திரும்பினார்.