கர்நாடகத்தில் கன்னடர்களுக்கே வேலை சட்டம்: தமிழகத்திலும் புதிய சட்டத்தை அரசு நிறைவேற்ற வேண்டும்

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

Update: 2017-10-03 13:00 GMT

சென்னை,

கர்நாடகத்தில் உள்ள தனியார் நிறுவனங்களில் சி மற்றும் டி பிரிவு பணிகளை கன்னடர்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும் என்ற புதிய சட்டத்தைக் கொண்டுவர அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக, கர்நாடக அரசு ஏற்கனவே கொண்டு வந்த அரசாணையை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், அதைப் பாதுகாப்பதற்காகவே இச்சட்டத்தை கர்நாடகம் கொண்டு வருகிறது.

கர்நாடக அரசு கொண்டு வரவுள்ள சட்டத்தால் அம்மாநிலத்தில், குறிப்பாக பெங்களூரு, மைசூரு பகுதிகளில் வசிக்கும் தமிழர்களின் வேலைவாய்ப்பு மிகக்கடுமையாக பாதிக்கப்படும். சொந்த மாநிலமான தமிழகத்திலும் வேலைவாய்ப்புகளை மற்ற மாநிலத்தவரிடம் பறிகொடுத்து பிற மாநிலங்களிலும் வேலை கிடைக்காமல் தவிக்கும் நிலை தமிழர்களுக்கு ஏற்படும் ஆபத்து உள்ளது. அப்படி ஒரு நிலை ஏற்படாமல் தடுத்து தமிழர்களின் வேலைவாய்ப்புரிமையை பாதுகாக்க தமிழக அரசு என்ன செய்யப்போகிறது?.

கன்னடர்களின் வேலைவாய்ப்புரிமையை பாதுகாக்க கர்நாடக அரசு கொண்டு வரவுள்ள சட்டத்தைப் போலவே தமிழ்நாட்டிலும் தனியார் நிறுவனங்களில் சி மற்றும் டி பிரிவு பணிகளில் தமிழர்களுக்கு 100 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் வகையில் புதிய சட்டத்தை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். இது தொடர்பாக அரசியல் கட்சிகள் மற்றும் சட்ட வல்லுனர்களிடம் தமிழக அரசு விவாதிக்க வேண்டும்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்