நீர்மட்டம் 94 அடியாக உயர்வு மேட்டூர் அணையில் இருந்து இன்று தண்ணீர் திறப்பு

சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து இன்று தண்ணீர் திறக்கப்படுகிறது.

Update: 2017-10-01 22:45 GMT
மேட்டூர்,

சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து இன்று தண்ணீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் நேற்று 94 அடியாக உயர்ந்தது.

தமிழகத்தின் ஜீவாதாரமாக விளங்கும் மேட்டூர் அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந் தேதி டெல்டா பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை கைகொடுக்கவில்லை. மேலும், கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்கு காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின்படி கிடைக்க வேண்டிய தண்ணீரும் முழுமையாக கிடைக்கவில்லை.

இதனால் மேட்டூர் அணைக்கு போதுமான நீர்வரத்து இல்லாமல் போனது. சில சமயங்களில் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 100 கனஅடிக்கு கீழே குறைந்தது.

இந்த நிலையில் கடந்த 2 மாதங்களாக கர்நாடகம் மற்றும் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்தது. இதன் காரணமாக கர்நாடகத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த அணைகளுக்கு வரும் நீர்வரத்து அப்படியே காவிரி ஆற்றில் திறந்து விடப்படுகிறது.

இவ்வாறு திறந்து விடப்படும் தண்ணீர் தமிழக-கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலு பகுதியை கடந்து ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணையை வந்தடைந்தது. இதன்காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து கொண்டே வந்தது. அதன்படி நேற்று அணையின் நீர்மட்டம் 94 அடியாக உயர்ந்தது (அணையின் உச்சபட்ச நீர்மட்டம் 120 அடி). அணைக்கு வினாடிக்கு 17,875 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

இதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின்பேரில் இன்று (திங்கட்கிழமை) காலை 9.30 மணிக்கு மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசன பகுதிகளில் சம்பா சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், மின்துறை அமைச்சர் தங்கமணி, சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆகியோர் கலந்துகொண்டு பாசனத்துக்கு தண்ணீரை திறந்து வைக்கிறார்கள்.

மேலும் செய்திகள்