இந்தியாவிலேயே சிறந்த புனித தலமாக மீனாட்சி அம்மன் கோவில் தேர்வு

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் இந்தியாவிலேயே சிறந்த புனித தலமாக தேர்வு செய்யப்பட்டு, மத்திய அரசால் சிறப்பு விருது வழங்கப்படுகிறது.

Update: 2017-10-01 23:45 GMT
மதுரை,

மதுரை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

மத்திய அரசின் தூய்மை பாரத இயக்க திட்டத்தின் கீழ் தூய்மையான புனித தலங்களை உருவாக்கும் முயற்சி நடந்து வருகிறது. அதன்படி முதற் கட்டமாக இந்தியா முழுவதும் 10 புனித தலங்கள் தேர்வு செய்யப்பட்டு, மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

அதில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலும் ஒன்றாகும். மீனாட்சி அம்மன் கோவிலை தூய்மையான புனித தலமாக மேம்படுத்துவதற்காக மதுரை மாநகராட்சியுடன், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன் நிறுவனம் இணைந்து ரூ.11.65 கோடி செலவில் தூய்மை மேம்பாட்டு பணிகள் செய்யப்பட்டன.

அதன்படி இங்கு நவீன மின்னணு கழிப்பறை, மக்கும், மக்காத குப்பைகளை தரம் பிரித்து வழங்குவதற்காக இரட்டை குப்பைத் தொட்டிகள், அவ்வாறு சேகரிக்கப்படும் குப்பைகளில் இருந்து அந்த இடத்திலேயே இயற்கை உரம் தயாரித்தல், குப்பைகளை சேகரிக்க வாகன வசதி, குப்பைகளை சாலைகளில் போடுவதை தடுக்க தூய்மை காவலர்கள் மூலம் கண்காணிப்பு 24 மணி நேர துப்புரவு பணி, கோவிலை சுற்றி பிளாஸ்டிக் பைகளுக்கு தடை, நவீன மண்கூட்டும் எந்திரம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக மீனாட்சி அம்மன் கோவில், இந்தியாவிலேயே சிறந்த புனித தலமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதற்கான சிறப்பு விருது மத்திய அரசின் குடிநீர் மற்றும் துப்புரவு அமைச்சகத்தால் வழங்கப்பட உள்ளது. விருது வழங்கும் நிகழ்ச்சி டெல்லியில் இன்று(திங்கட்கிழமை) நடக் கிறது.

இதில் கலெக்டர் வீரராகவராவ், மாநகராட்சி கமிஷனர் அனீஷ்சேகர் ஆகியோர் கலந்துகொண்டு விருதை பெறுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்