வேலை செய்யாத எம்.எல்.ஏ.க்களை கோர்ட்டு எச்சரிக்க வேண்டும் - நடிகர் கமல்ஹாசன்

“வேலை செய்யாமல் சொகுசு விடுதியில் இருக்கும் எம்.எல்.ஏக்களை நீதிமன்றம் எச்சரிக்க வேண்டும்” என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.

Update: 2017-09-15 23:30 GMT
சென்னை,

நடிகர் கமல்ஹாசன் அரசியலில் ஈடுபட முடிவு எடுத்து டுவிட்டரில் ஆட்சியாளர்களுக்கு எதிராக தொடர்ந்து கருத்துகள் பதிவிட்டு வருகிறார். இதனால் அமைச்சர்களுக்கும் கமல்ஹாசனுக்கும் அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன.

நான் அரசியலுக்கு வந்து விட்டேன். கோட்டையை நோக்கிய எனது பயணம் தொடங்கி விட்டது என்று கமல்ஹாசன் பகிரங்கமாக அறிவித்து அதற்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இன்னும் ஓரிரு மாதங்களில் கமல்ஹாசன் அரசியலில் குதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தனி கட்சி

எந்த கட்சியிலும் சேரமாட்டேன் என்றும் அரசியலுக்கு வரும் சூழ்நிலையில் தனி கட்சிதான் தொடங்குவேன் என்றும் கமல்ஹாசன் தெளிவுபடுத்தி இருக்கிறார். இந்த நிலையில் எம்.எல்.ஏக்கள் சொகுசு விடுதிகளில் தங்குவதையும் அரசு ஊழியர்கள் போராட்டம் குறித்தும் கமல்ஹாசன் புதிதாக கருத்து தெரிவித்து இருக்கிறார்.

ஏற்கனவே ஓ.பன்னீர் செல்வத்துக்கு எதிராக கிளம்பிய எம்.எல்.ஏக்கள் சென்னையை அடுத்த கூவத்தூர் சொகுசு விடுதியில் பல நாட்கள் தங்கி இருந்து பரபரப்பை ஏற்படுத்தினார்கள். அப்போது குதிரை பேரங்கள் நடந்ததாக எதிர்கட்சியினர் குற்றம் சாட்டினார்கள். தற்போது டி.டி.வி தினகரனை ஆதரிக்கும் எம்.எல்.ஏக்களும் புதுச்சேரி சொகுசு விடுதிகள் மற்றும் மைசூருவில் உள்ள குடகு சொகுசு விடுதி என்று மாறி மாறி தங்கி ஆட்சிக்கு எதிராக காய் நகர்த்தி வருகிறார்கள்.

விடுதியில் எம்.எல்.ஏ.க்கள்

இதில் குதிரை பேரம் நடப்பதாகவும் வேலையை செய்யாமல் இப்படி விடுதிகளில் தங்கி இருக்கும் எம்.எல்.ஏக்களை கோர்ட்டு கண்டிக்க வேண்டும் என்றும் கமல்ஹாசன் கூறி இருக்கிறார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கமல்ஹாசன் நேற்று பதிவிட்ட கருத்து வருமாறு:-

“வேலை செய்யாவிட்டால் சம்பளம் கிடையாது என்பது அரசு ஊழியர்களுக்கு மட்டும்தானா? அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது என்றால் குதிரை பேரத்தில் ஈடுபட்டு சொகுசு விடுதியில் ஓய்வு எடுக்கும் அரசியல்வாதிகளுக்கு? மதிப்பிற்குரிய நீதிமன்றம் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்களை எச்சரிக்கிறது. இதேபோன்று வேலையை தவிர்த்து வரும் எம்.எல்.ஏக்களுக்கும் எச்சரிக்கை விடுக்குமாறு நீதிமன்றத்தை கேட்டுக்கொள்கிறேன்.”

இவ்வாறு கமலஹாசன் கூறியுள்ளார். 

மேலும் செய்திகள்