ஒரு வாரத்தில் அரசை வீட்டுக்கு அனுப்புவோம் டி.டி.வி.தினகரன் பேட்டி

ஒரு வாரத்தில் எடப்பாடி அரசை வீட்டுக்கு அனுப்புவோம் என்று டி.டி.வி.தினகரன் நம்பிக்கை தெரிவித்தார்.

Update: 2017-09-15 23:15 GMT
சென்னை,

அ.தி.மு.க. (அம்மா) அணி துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் சென்னை பெசன்ட் நகரில் உள்ள தனது வீட்டில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

ஒரு வாரத்தில் வீட்டுக்கு அனுப்பலாம்

கேள்வி: உங்கள் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் விடுதியில் தங்க வைக்கப்பட்டு ஏறக்குறைய ஒரு மாத காலம் ஆகிறது. இது இன்னும் எவ்வளவு நாள் நீடிக்கும்?

பதில்: அனேகமாக நல்ல முடிவு வந்து கொண்டு இருக்கிறது. எனது நம்பிக்கையின் படி அடுத்த வாரத்தில் பழனிசாமி, பன்னீர்செல்வத்தை வீட்டுக்கு அனுப்பிவிடலாம் என நினைக்கிறேன். அந்த நிலை வந்துவிட்டது என்றே நான் நம்புகிறேன்.

என்றைக்கும் அதர்மமும், துரோகமும் வென்றதாக சரித்திரம் இல்லை. இன்னும் ஒருவாரத்தில் இந்த துரோகத்துக்கு எல்லாம் சட்டமன்றத்தில் நாங்கள் முடிவு விழா நடத்திவிடுவோம்.

தி.மு.க.வுடன் கூட்டணி இல்லை

கேள்வி: ஒரு பக்கம் தி.மு.க. எதிரி என்கிறீர்கள். ஆனால், அ.தி.மு.க. ஆட்சியை அகற்ற தி.மு.க.வுடன் கோர்ட்டில் கூட்டணி சேர்வதாக எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் இருந்து ஒரு குற்றச்சாட்டு உள்ளதே?

பதில்: இதே எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளரால் கைகாட்டப்பட்டு முதல்-அமைச்சர் ஆனவர். அவர் பொதுச் செயலாளரின் படமே இருக்கக் கூடாது என்று தலைமை கழகத்தில் இருந்து எடுத்து தூக்கி எறிந்தவர். பொதுச்செயலாளரை பதவியில் இருந்து நீக்குவதற்காக பொதுக்குழு என்று ஒரு கூட்டத்தை கூட்டி முடிவு எடுத்தவர். இவர் இன்று எங்களை பேசுகிறார்.

நான் மீண்டும் மீண்டும் சொல்கிறேன், தி.மு.க. எங்களது பிரதான எதிர்க்கட்சி. அவர்களுடன் எங்களுக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ எந்தவித கூட்டணியும் கிடையாது.

என்ன தப்பு இருக்கிறது?

தி.மு.க. சார்பில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரி நேற்று(நேற்று முன்தினம்) கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்கள். அந்த நேரத்தில் வெற்றிவேல் எம்.எல்.ஏ.வும், எங்கள் வக்கீலும் சபாநாயகரை சந்தித்த போது, எங்களை தகுதி நீக்கம் செய்துவிட்டு, திங்கட்கிழமையே ஓட்டெடுப்பு நடத்தலாம் என்பது தெரியவந்த உடனே நாங்களும் வழக்கு தொடர்ந்தோம். இதில் என்ன தப்பு இருக்கிறது? இது யதார்த்தமாக நடந்தது. இறைவன் எங்களுடன் இருக்கிறான். நீதிமன்றத்தில் நிச்சயம் நீதி கிடைக்கும்.

கேள்வி: அக்டோபர் 31-ந் தேதிக்குள் சின்னம் யாருக்கு என்பதை தேர்தல் கமிஷன் சொல்ல வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. சின்னத்தை மீட்பதற்கான உங்கள் நடவடிக்கை எந்த அளவில் உள்ளது?

பதில்: சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும். இன்னொரு விஷயம், ஸ்டாலின் தெரிந்தோ, தெரியாமலோ எங்களுக்கு நன்றாக உதவி செய்துள்ளார்.

கவர்னரின் கவனத்தை ஈர்க்கவே...

கேள்வி: அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்வதை கோர்ட்டு கண்டிக்கிறது. ஆனால் உங்கள் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் விடுதியில் தங்கி இருப்பதை கேட்கவில்லை என கமல்ஹாசன் கூறியிருக்கிறாரே?

பதில்: அவர் என்ன அர்த்தத்தில் சொன்னார் என்று தெரியாது. எம்.எல்.ஏ.க்கள் யாரும் வேலை நிறுத்தம் செய்யவில்லை. சட்டமன்றம் இப்போது கூடவில்லை. இந்த நேரத்தில் அவர்கள் தொகுதியில் இருப்பார்கள். தொகுதி சம்பந்தமான வேலைகளை தலைமை செயலகத்தில் வந்து பார்ப்பார்கள்.

தலைமை செயலகத்துக்கு எங்கள் எம்.எல்.ஏ.க்கள் வந்தாலே தினகரனிடம் இருந்து எங்களிடம் வந்துவிட்டனர் என்று சொல்கிறார்கள். மேலும் கவர்னரின் கவனத்தை ஈர்ப்பதற்காகவே அவர்கள் அங்கு இருக்கிறார்கள்.

இவ்வாறு டி.டி.வி. தினகரன் பதில் அளித்தார். 

மேலும் செய்திகள்