1,700 மதுபான கடைகளை மூடக்கோரிய வழக்கில் ஐகோர்ட்டில் 19-ந்தேதி தீர்ப்பு
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் புதிதாக திறக்கப்பட்ட 1,700 மதுபானக்கடைகளை மூடக்கோரி தொடர்ந்த வழக்கின் மீதான தீர்ப்பு 19-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சென்னை,
தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலை ஓரங்களில் இருந்த மதுக்கடைகளை அகற்ற சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மதுபான கடைகள் மூடப்பட்டு வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டன.
இந்தநிலையில் மூடப்பட்ட மதுபான கடைகளை மீண்டும் திறப்பதற்கு ஏதுவாக சண்டிகார் அரசு, மாநில நெடுஞ்சாலைகளை மாவட்ட சாலைகளாக மாற்றி உள்ளதாக கூறி சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, சாலைகள் மாற்றப்பட்ட விவகாரத்தில் தலையிட மறுத்து மாநகராட்சி, நகராட்சிக்கு உட்பட்ட சாலை ஓரங்களில் மதுபான கடைகளை திறக்க எந்த தடையும் இல்லை என்று விளக்கம் அளித்தது.
திறக்கக்கூடாது
இதைதொடர்ந்து, தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் சாலை ஓரங்களில் மதுபான கடைகளை திறக்க மாவட்ட கலெக்டர்கள் அனுமதிக்கலாம் என்று மதுவிலக்கு ஆயத்தீர்வை ஆணையர் ஒரு உத்தரவை சமீபத்தில் பிறப்பித்தார். அதன்படி, தற்போது தமிழகத்தில் 1,700 மதுபான கடைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில் மதுவிலக்கு ஆயத்தீர்வை ஆணையர் பிறப்பித்த உத்தரவை ரத்துசெய்யக்கோரி வக்கீல் கே.பாலு சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், ‘மாநில சாலைகளை மாவட்ட சாலைகளாக மாற்றினாலும் புதிதாக மதுபானக்கடைகளை திறக்கக்கூடாது என்று சென்னை ஐகோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவை மீறும் வகையில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் திறக்கப்பட்ட 1,700 மதுபான கடைகளை மூட உத்தரவிட வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.
19-ந்தேதி தீர்ப்பு
இந்த மனு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தலைமை வக்கீல் விஜய் நாராயண், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு உட்பட்டே மதுபான கடைகள் திறக்கப்பட்டுள்ளதாகவும், இதுபோன்ற மனுவை மதுரை ஐகோர்ட்டு கிளை ஏற்கனவே தள்ளுபடி செய்துள்ளதாகவும் கூறினார்.
இதைதொடர்ந்து, வழக்கின் மீதான தீர்ப்பை வருகிற 19-ந்தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.