ஜாமீனில் குற்றவாளி வெளிவர போலீஸ் உயர் அதிகாரிகள் காரணம் -டாக்டர் ராமதாஸ்
பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில், ஜாமீனில் குற்றவாளி வெளிவர போலீஸ் உயர் அதிகாரிகள் காரணமாக இருந்திருக்கிறார்கள் என்று டாக்டர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை,
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
குற்றவாளி ஜாமீனில் விடுதலை
சென்னை மாங்காடு பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த 6 வயது சிறுமி கடந்த பிப்ரவரி மாதம் 12-ந் தேதி அதே குடியிருப்பைச் சேர்ந்த தஷ்வந்த் என்பவனால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டாள். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட தஷ்வந்த், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டான். அவன் மீதான குண்டர் சட்ட நடவடிக்கையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடும் குற்றவாளிகளை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கும் வகையில் அச்சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. அப்படியிருந்தும் தஷ்வந்தால் குண்டர் சட்ட கைது நடவடிக்கைகளில் இருந்து விடுதலையாக முடிகிறது என்றால், சட்டத்தின் ஓட்டைகள் சரியாக பயன்படுத்தப்பட்டிருப்பதாகவே தோன்றுகிறது.
விசாரணை நடத்த வேண்டும்
காவல்துறை உயர் அதிகாரிகள் மாதம்தோறும் ஆய்வு செய்திருந்தால் 90 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருக்கும். குற்றவாளியும் ஜாமீனில் வெளிவந்திருக்க முடியாது. எனவே, இந்த வழக்கில் விசாரணை அதிகாரிகள் மட்டுமின்றி உயர் அதிகாரிகளும் குற்றவாளி விடுதலையாக காரணமாகவோ, உடந்தையாகவோ இருந்துள்ளனர்.
சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் படுகொலை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாதது ஏன்? என்பது குறித்து போலீஸ் ஐ.ஜி. நிலையிலான அதிகாரியை நியமித்து விசாரிக்க வேண்டும். தவறு செய்த காவல் அதிகாரிகள் எந்த நிலையில் இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வழக்கில் ஜாமீனில் வெளிவந்த தஷ்வந்தை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். இதற்கெல்லாம் மேலாக இதுபோன்ற வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை என்பது போன்ற காரணங்களுக்காக குற்றவாளிக்கு பிணை வழங்குவதை நீதிமன்றங்கள் தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.