அ.தி.மு.க. ஆட்சியை தூக்கி எறிந்தால் தான் தமிழகத்துக்கு விடியல் -கனிமொழி எம்.பி. பேச்சு
அ.தி.மு.க. ஆட்சிக்கு முடிவுகட்ட வேண்டிய நாள் நெருங்கி விட்டது என்று கனிமொழி எம்.பி., கூறினார்.
சென்னை,
‘நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரி சென்னை வள்ளுவர்கோட்டம் அருகே தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தி.மு.க. மேற்கு மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மகளிரணி புரவலர் விஜயா தாயன்பன், கவிஞர் சல்மா, பகுதி செயலாளர் எஸ்.மதன் மோகன், தமிழக காங்கிரஸ் துணை தலைவர் எச்.வசந்தகுமார் உள்பட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர், தென்சென்னை மாவட்ட தலைவர் கராத்தே ஆர்.தியாகராஜன், தி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி., முன்னாள் எம்.எல்.ஏ. பழ கருப்பையா, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில குழு உறுப்பினர் சுசீலா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட தலைவர் பாக்கியம், திராவிடர் கழக தென்சென்னை மாவட்ட செயலாளர் பார்த்தசாரதி உள்ளிட்டோர் கண்டன உரை ஆற்றினர்.
கனிமொழி எம்.பி., பேச்சு
ஆர்ப்பாட்டத்தில் கனிமொழி எம்.பி., பேசியதாவது:-
தமிழ்நாடு தனித்துவமான மாநிலம். சமூக நீதிக்காக போராடும் ஒரே மாநிலம் தமிழ்நாடு தான். தி.மு.க. சமூகநீதிக்காகவே உருவாக்கப்பட்டது.
நீட் தேர்வுக்காக ஒவ்வொரு மாதமும் ரூ.30 ஆயிரம் வரை செலவு செய்து பயிற்சி எடுத்துக் கொண்ட மாணவர்களுக்கு தான் மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்து இருக்கிறது. எனவே ‘நீட்’ என்பது தகுதி தேர்வா? ஏழை-எளிய, ஒடுக்கப்பட்ட மாணவர்கள் படிக்கக் கூடாது என்று வடிக்கட்டும் தேர்வா?.
வசதி வாய்ப்பு இருக்கிறவர்கள் உயர்ந்து கொண்டே இருக்க வேண்டும். ஏழை-எளியவர்கள் தாழ்ந்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காக நீட் தேர்வு கொண்டு வரப்பட்டு உள்ளது.
ஏற்ற, தாழ்வை தாண்டி வந்துக்கொண்டிருக்கும் வேளையில் மீண்டும் மக்களிடையே ஏற்ற, தாழ்வை ஏற்படுத்தும் மத்திய அரசின் முயற்சிக்கு தமிழகம் அடி பணியாது. தி.மு.க.வும், மு.க.ஸ்டாலினும் அதனை ஓட, ஓட விரட்டி அடிப்பார்கள். தமிழகத்தில் உள்ள ஆட்சியாளர்கள் தங்களது பதவியை காப்பாற்றி கொள்ள நினைக்கிறார்களே தவிர, மக்கள் பிரச்சினையை பற்றி உணர்வது இல்லை. எனவே இந்த ஆட்சிக்கு முடிவுகட்ட வேண்டிய நாள் நெருங்கிவிட்டது. இந்த ஆட்சியை தூக்கி எறிந்தால் தான் தமிழகத்துக்கு விடியல் கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சு.திருநாவுக்கரசர்
தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர் பேசும் போது, அ.தி.மு.க. பொதுகுழுவில் கட்சியின் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா என்று தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறார்கள். எனவே அ.தி.மு.க.வில் ஆவி கட்சியும், காவி (பா.ஜ.க.) ஆட்சியும் நடக்கிறது. ‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு பெறும் வரை தொடர்ந்து போராடுவோம். மு.க.ஸ்டாலினுடன் இணைந்து புதிய ஆட்சியை கொண்டு வருவோம் என்றார்.
கி.வீரமணி, தா.பாண்டியன்
சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளர் பி.கே.சேகர்பாபு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தன், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் தா.பாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, தி.மு.க. எம்.பி. டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பேசும்போது, ‘சவப்பெட்டிக்குள் நீட் தேர்வையும், நவோதயா பள்ளி கொண்டு வரும் எண்ணத்தையும் அனுப்பும் வரை போராட்டம் தொடரும்’ என்றார்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் தா.பாண்டியன் பேசுகையில், ‘ஆட்சி பொறுப்பில் இருப்பவர்கள் சரியான முரடர்கள். நியாயத்தை, நீதியை எதிர்பார்த்து அமைதி வழியில் நாம் போராடுவது ஏமாளியாக்கிவிடும். நாட்டை மீட்க வேண்டிய கவலை நமக்கு இருக்கிறது’ என்றார்.
தொல்.திருமாவளவன்
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பேசும்போது, ‘நீட் தேர்வில் சதிநோக்கம் இருக்கிறது. கல்வியை மத்திய அரசு திணிக்க பார்க்கிறது. இதனால் நம்முடைய கல்வி உரிமை பறிபோகும். மாநில அரசின் இதுபோன்ற உரிமையை பறிப்பதும் சமூக நீதிக்கு எதிரானது தான்’ என்றார்.
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
ஆதம்பாக்கத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். தி.மு.க. முன்னாள் எம்.பி. ஆ.ராசா, வர்த்தகர் அணி மாநில செயலாளர் கவிஞர் காசிமுத்து மாணிக்கம், தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட தலைவர் ஏழுமலை உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தண்டையார்பேட்டை வைத்தியநாதன் மேம்பாலம் அருகில் கண்டனம் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. துணை பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன், முன்னாள் அமைச்சர் கே.பி.பி.சாமி எம்.எல்.ஏ., தி.மு.க. மாவட்ட செயலாளர் சுதர்சனம், மாநில வர்த்தக அணி துணை செயலாளர் பாண்டிச்செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.