முதல்-அமைச்சர், 4 அமைச்சர்களை தகுதி நீக்கம் செய்யக்கோரிய வழக்கு முடித்துவைப்பு

அரசியல் அமைப்புக்கு எதிராக செயல்படவில்லை என முதல்-அமைச்சர் மற்றும் 4 அமைச்சர்கள் பதில் அளித்ததால், அவர்களை தகுதி நீக்கம் செய்யக்கோரிய வழக்கை முடித்து வைத்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2017-09-13 20:55 GMT
மதுரை, 

ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் ஆணழகன், மதுரை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார்.

அதில், ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை அமைச்சர்கள் செங்கோட்டையன், செல்லூர்ராஜு, திண்டுக்கல் சீனிவாசன், காமராஜ் ஆகியோர் பார்த்து, அரசின் செயல்பாடுகள் குறித்து அவரிடம் பேசியதாக செய்தி வந்தது. அவர்களின் செயல்பாடு இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 188-வது ஷரத்துக்கும், அமைச்சராக பொறுப்பு ஏற்கும்போது எடுத்த ரகசிய காப்பு உறுதி மொழிக்கும் எதிரானது. இந்த செயல்களுக்கு முதல்-அமைச்சரும் எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. எனவே முதல்-அமைச்சர் மற்றும் 4 அமைச்சர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

விவாதிக்கவில்லை

அப்போது முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. முதல்- அமைச்சர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், ‘நான் எடுத்த ரகசிய காப்புக்கோ, அரசியலமைப்புக்கு எதிராகவோ செயல்படவில்லை’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அமைச்சர்கள் தரப்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், ‘சசிகலாவை எங்களுக்கு நீண்ட நாட்களாக தெரியும். அவரது உடல்நலம் பற்றி விசாரிக்கத்தான் சிறைக்கு சென்றோம். அவரிடம் தமிழக அரசு சம்பந்தமாகவோ, நிர்வாகம் தொடர்பாகவோ நாங்கள் விவாதிக்கவில்லை. எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர். 

மேலும் செய்திகள்