நீல திமிங்கல விளையாட்டில் ஈடுபட்ட 10-ம் வகுப்பு மாணவன் மீட்பு
தர்மபுரி அருகே நீல திமிங்கல விளையாட்டில் ஈடுபட்ட 10-ம் வகுப்பு மாணவன் கை நகங்களை கீறிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தர்மபுரி,
தர்மபுரி மாவட்டம் இண்டூர் அருகே உள்ள பூட்டுக்காரன்தோப்பை சேர்ந்த 16 வயது மாணவன் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறான். இவனிடம் செல்போன் இல்லை.
கடந்த சில நாட்களாக அந்த மாணவனின் தினசரி நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டது. மாணவன் திடீரென தனது ஆள்காட்டிவிரல் நகங்களை குண்டூசியால் கீறியும், குத்தியும் காயத்தை ஏற்படுத்திக் கொண்டான்.
இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர், அவனிடம் விசாரித்தபோது அவன், தனது நண்பர்கள் சிலரின் செல்போன் மூலம் நீலதிமிங்கல விளையாட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
கண்காணிக்க குழு
இதையடுத்து அந்த மாணவனை தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் உள்ள மனநல சிகிச்சை பிரிவில் பெற்றோர் சேர்த்து சிகிச்சை அளித்தனர். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் அந்த மாணவனுடன் சேர்ந்து நீலதிமிங்கல விளையாட்டில் ஈடுபட்டவர்கள் யார்? என்பது குறித்து விசாரித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் நீலதிமிங்கல விளையாட்டு தொடர்பாக கண்காணிப்பு பணி மேற்கொள்ள 2 போலீஸ் குழுக்களை அமைத்து போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதர் உத்தரவிட்டார். இதையடுத்து மாவட்டம் முழுவதும் நீலதிமிங்கல விளையாட்டை கண்காணிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.