அ.தி.மு.க. பொதுக்குழு முடிவுக்கு தினகரன் ஆதரவாளர்கள் எதிர்ப்பு

டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் அ.தி.மு.க. பொதுக்குழு முடிவுக்கு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

Update: 2017-09-12 23:00 GMT
சென்னை,

சென்னையை அடுத்த வானகரத்தில் நடந்த அ.தி.மு.க. பொதுக்குழுவில் அ.தி.மு.க. பொதுச் செயலாளராக சசிகலாவை நியமனம் செய்தது ரத்து செய்யப்படுகிறது என்றும், சசிகலா நியமித்த நியமனங்கள் செல்லாது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த நேரத்தில் டி.டி.வி.தினகரன் மதுரையில் இருந்தார். பின்னர் மதுரையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்ட டி.டி.வி.தினகரன் பிற்பகல் 3.30 மணியளவில் சென்னை பெசன்ட் நகரில் உள்ள அவரது வீட்டிற்கு வந்தார்.

அப்போது அங்கு திரண்டு இருந்த டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் அ.தி.மு.க. பொதுக்குழு முடிவுக்கு தங்களது எதிர்ப்பை தெரிவித்ததுடன், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு எதிராக கோஷம் எழுப்பினர். மேலும் ஆட்சியை கலைக்க வேண்டும் என்றும் கோஷமிட்டனர்.

பின்னர் டி.டி.வி.தினகரன் தனது வீட்டில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென அவரது ஆதரவாளர்கள் சிலர் பெசன்ட் அவென்யூ சாலைக்கு வந்து, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் உருவபடத்தை, தீயிட்டு கொளுத்தினர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்