‘நீட்’ தேர்வு பயிற்சி மையங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளதா? தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி
‘நீட்’ தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்த பயிற்சி மையங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளதா? என்று தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு நீதிபதி கேள்வி எழுப்பி உள்ளார்.
சென்னை,
உடுமலைப்பேட்டையை சேர்ந்த மாணவி கிருத்திகா, பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் தன்னை மருத்துவ கலந்தாய்வுக்கு அழைக்க உத்தரவிடக்கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், ‘நீட்’ தேர்வு அடிப்படையில் மருத்துவ கலந்தாய்வை நடத்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதால் கிருத்திகாவின் மனுவை தள்ளுபடி செய்தார்.
மேலும் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘நீட்’ தேர்வால் தமிழக மாணவர்களும், பெற்றோர்களும் கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். இந்த மன அழுத்தத்தால் அவர்கள் தவறான முடிவுகளை எடுக்கக்கூடும். எனவே அவர்களுக்கு தன்னம்பிக்கையூட்டும் வகையில் தமிழக அரசு கவுன்சிலிங் அளித்து அவர்களின் மனச்சோர்வை போக்க வேண்டும். இதுதொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.
பயிற்சி மையங்கள்?
அந்த வழக்கு நேற்று நீதிபதி என்.கிருபாகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, ‘நீட்’ விவகாரம் தொடர்பாக ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை தமிழக அரசு முறையாக அமல்படுத்தி இருந்தால் மாணவி அனிதாவின் மரணத்தை தடுத்து இருக்கலாம் என்று கருத்து தெரிவித்தார்.
பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ஏற்கனவே ஐகோர்ட்டு உத்தரவிட்டபடி ‘நீட்’ தேர்வால் பாதிக்கப்பட்ட மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு கவுன்சிலிங் அளிக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளதா?, ‘நீட்’ தேர்விற்கு மாணவர்களை தயார்படுத்த சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்களா? பயிற்சி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளனவா? என்று தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவிட்டார்.
இந்த ஆண்டு அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் எத்தனை பேருக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது என்பது குறித்தும் அரசு பதில் அளிக்க உத்தரவிட்டார். பின்னர், விசாரணையை நாளைக்கு (14-ந் தேதி) தள்ளிவைத்தார்.