போராட்டத்தில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பங்கேற்காது மாநில பொதுச்செயலாளர் பேட்டி
அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் நடத்தும் போராட்டத்தில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பங்கேற்பது இல்லை என அந்த சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் தெரிவித்தார்.
திருத்தணி,
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழு கூட்டம், திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் நடைபெற்றது.
கூட்டத்தில் சங்கத்தின் மாநில தலைவர் சுதாதரன், பொதுச்செயலாளர் ரங்கராஜன், மாநில பொருளாளர் கதிரவன், மாவட்ட தலைவர் உதயகுமார், பொருளாளர் பூங்கோதை, திருத்தணி வட்டார தலைவர் சேகர், செயலாளர் கோவிந்தராஜூலு, பொருளாளர் முரளி மற்றும் தமிழகம் முழுவதிலும் இருந்து மாவட்ட தலைவர்கள் உள்பட சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
பின்னர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ரங்கராஜன், நிருபர்களிடம் கூறியதாவது:-
போராட்டத்தில் பங்கேற்காது
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். 7-வது ஊதியக்குழு முரண்பாடுகளை களைந்து புதிய ஊதியம் நிர்ணயம் செய்து குறித்து அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது.
இன்னும் 3 மாதங்களில் இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார். அதுவரை இடைக்கால நிவாரணம் வழங்கி எங்கள் கோரிக்கைகள் தொடர்பாக புதிய செயல் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் எனவும் வாக்குறுதி அளித்து உள்ளார்.
முதல்-அமைச்சர் தெரிவித்த கருத்துக்கு மதிப்பளித்து, அவர் மீது முழு நம்பிக்கை கொண்டு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியை சேர்ந்த ஆசிரியர்கள் இனி ஆசிரியர்கள்-அரசு ஊழியர்கள் நடத்தும் போராட்டங்களில் கலந்துகொள்வது இல்லை என மாநில செயற்குழு கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.