சி.பா. ஆதித்தனார் சிலையை அதே இடத்திலேயே நிறுவ வேண்டும் அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தல்

சி.பா.ஆதித்தனார் பிறந்தநாளையொட்டி, அவரது உருவசிலையை வருகிற 27-ந் தேதிக்கு முன்னதாக அதே இடத்திலேயே நிறுவ வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Update: 2017-09-10 21:30 GMT
சென்னை,

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ் பற்றும், நாட்டுப்பற்றும் கொண்ட சி.பா.ஆதித்தனார், தமிழகத்தில் ‘தினத்தந்தி’ நாளிதழை தொடங்கி, அதன்மூலம் பாமர மக்களும் செய்திகளை எளிதில் புரிந்துகொள்ளும் நடைமுறையை அமைத்துக்கொடுத்தவர். தனது பத்திரிகையில் சாதாரண மக்களை முன்னிறுத்தி, எளிய தமிழ் நடையைக் கையாண்டவர்.

இந்த நிலையில் சென்னை எழும்பூரில் உள்ள அவரது உருவ சிலையை தற்காலிகமாக அகற்றுவதாக கூறி, 3 மாத காலமாகியும் இன்னும் அச்சிலையை அங்கு நிறுவாமல் இருப்பது ஏற்புடையதல்ல. வருகிற 27-ந் தேதி சி.பா.ஆதித்தனாரின் பிறந்தநாள் வர இருப்பதால், அதற்கு முன்னதாக அவரது உருவ சிலையை மீண்டும் பழைய இடத்திலேயே நிறுவ வேண்டும்” என்று குறிப்பிட்டு உள்ளார்.

சரத்குமார்

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ் பற்று மிக்க அரசியல்வாதி, பத்திரிகையாளர், வழக்கறிஞர் என பன்முகம் கொண்ட பண்பாளர், பத்திரிகை துறையில் பெரும் புரட்சியை ஏற்படுத்திய சி.பா.ஆதித்தனாரின் நினைவை போற்றும் வகையில், சென்னை எழும்பூரில் அமைந்திருந்த அவரது சிலையை போக்குவரத்து சீரமைப்பு என்ற பெயரில் அகற்றிவிட்டனர். ஆனால் இதுவரை எந்த சீரமைப்பும் செய்யப்படவில்லை. ஆகவே, வருகிற 27-ந் தேதி அவரது பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் சிலையை அதே இடத்தில் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சீமான்

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தோன்றின் புகழோடு தோன்றுக’ என்ற தமிழ்மறையின் வாழ்வியல் நெறிக்கிணங்கவே தனது வாழ்வினை வடித்துக்கொண்டு வாழ்ந்து மறைந்தவர் சி.பா. ஆதித்தனார். அவரது நினைவு நாளிலும், பிறந்த நாளிலும் தமிழக அரசியல் தலைவர்களும், தமிழின உணர்வாளர்களும் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

எம்.ஜி.ஆர். காலத்தில் நிறுவப்பட்டு 30 ஆண்டுகளாக சென்னை, எழும்பூரில் இருந்து வந்த சி.பா.ஆதித்தனாரின் சிலை போக்குவரத்து பணிகளுக்காக அகற்றப்பட்டது. ஆனால் பணிகள் முடிந்த பின்னரும் அவரது சிலையை மீண்டும் நிறுவுவதற்கான எந்த முயற்சியும் எடுக்கப் பட்டதாக தெரியவில்லை. எனவே சி.பா.ஆதித்தனாரின் சிலையை அவரது பிறந்த நாளான வருகிற 27-ந் தேதிக்குள் மீண்டும் அதே இடத்தில் நிறுவிட வேண்டும் என்று குறிப்பிட்டு உள்ளார்.

என்.ஆர்.தனபாலன்

பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ் மக்கள் அனைவராலும் ‘பெரிய அய்யா’ என்று அன்போடு அழைக்கப்பட்ட சி.பா. ஆதித்தனாருக்கு, எழும்பூர் பாந்தியன் சாலை சந்திப்பில் எம்.ஜி.ஆர். முழு உருவ சிலை திறந்து வைத்தார். ஆனால் போக்குவரத்து நெரிசல் என்று கூறி அச்சிலையை அரசு அகற்றியது. காலங்கள் கடந்தோடி விட்டது. அச்சிலையை பற்றி தமிழக அரசு கவலைப்பட்டதாகவே தெரியவில்லை. வருகிற 24-ந் தேதி சி.பா.ஆதித்தனாரின் சிலை நிறுவிய ‘சின்ன அய்யா’ பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்தாளையொட்டி, அவரது குடும்பத்தினர் சி.பா.ஆதித்தனார் சிலைக்கு மாலை அணிவித்து வணங்குவது வழக்கம். அதேபோல 27-ந் தேதி, சி.பா.ஆதித்தனார் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு பல்லாயிரக்கணக்கானோர் மரியாதை செலுத்துவர். எனவே சி.பா.ஆதித்தனார் சிலையை மீண்டும் அதே இடத்தில் நிறுவ உடனடி நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளார்.

சமத்துவ மக்கள் கழக நிறுவனத் தலைவர் ஏ.நாராயணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சி.பா.ஆதித்தனாரின் தமிழ் சேவையை போற்றி முன்னாள் முதல்- அமைச்சர் எம்.ஜி.ஆரால் சென்னை எழும்பூர் பாந்தியன் சாலை சந்திப்பில் அவருக்கு முழு உருவ சிலை அமைக்கப்பட்டு தினத்தந்தி நிறுவனத்தால் பராமரிக்கப்பட்டு வந்தது. போக்குவரத்து காரணங்களுக்காக அச்சிலை தற்காலிகமாக அகற்றப்பட்டது. ஆண்டுதோறும் செப்டம்பர் 27-ந் தேதி அவரது பிறந்த நாளில் அரசியல் கட்சி தலைவர்களும், தமிழ் ஆர்வலர்களும், சமுதாய தலைவர்களும், பொதுமக்களும் அவருக்கு மரியாதை செலுத்துவது வழக்கம். எனவே வருகிற 27-ந் தேதிக்குள் சி.பா.ஆதித்தனார் சிலையை மீண்டும் அதே இடத்தில் நிறுவி அனைவரும் மரியாதை செலுத்த வழிவகை செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளார்.

தட்சணமாற நாடார் சங்கம்

நெல்லை தட்சணமாற நாடார் சங்க செயலாளர் சண்முகவேல் நாடார் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஆண்டுதோறும் செப்டம்பர் 27-ந் தேதி சி.பா.ஆதித்தனார் பிறந்த நாள் அன்று அனைத்து தரப்பினரும் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்வது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அவரது உருவ சிலை அந்த இடத்தில் இருந்து அகற்றப்பட்டு இரண்டு மாதங்கள் ஆகிறது. ஒரு சில நாட்களில் அதே இடத்தில் சிலையை மீண்டும் நிறுவி விடுவோம் என்று கூறி அந்த சிலை அகற்றப்பட்டது.

எனவே தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் வாக்குறுதி கொடுத்தபடி போர்க்கால அடிப்படை யில் இன்னும் ஒரு வார காலத்திற்குள் சி.பா.ஆதித்தனார் சிலையை அதே இடத்தில் நிறுவ வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

மேலும் செய்திகள்