நீட் தேர்வு பிரச்சினை: ‘‘கல்வி அதிகாரங்கள் மாநில அரசிடம் இருக்க வேண்டும்’’ நடிகர் கமல்ஹாசன் பேச்சு
‘‘கல்வி திட்டங்களை உருவாக்கும் அதிகாரம் மாநில அரசுகளிடம்தான் இருக்க வேண்டும்’’ என்று நடிகர் கமல்ஹாசன் கூறினார்.
சென்னை,
நடிகர் கமல்ஹாசன் தனியார் டெலிவிஷனில் தொகுத்து வழங்கும் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் நீட் தேர்வு மற்றும் மாணவர்கள் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்து பேசியதாவது:–
‘‘நீட் தேர்வு பிரச்சினையில் நம் பிள்ளைகள் தெருவில் நிற்கிறார்கள். அவர்களை தெருவில் நிறுத்தி விட்டோம். அங்கே நிற்கும் பிள்ளைகள் அனைவரும் விளையும் பயிர்கள். இந்த பிரச்சினையில் அவர்கள் போராட வேண்டிய அவசியம் இல்லை என்று எனக்கு தோன்றுகிறது. நாம், நமது பிள்ளைகளின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் பொறுப்பை எங்கோ தவற விட்டு விட்டோம் என்பதுதான் பாமரத்தனமான என்னுடைய கருத்து.
நான் எடுத்து வைக்கும் கருத்து விமர்சனத்துக்கு உரியது. நல்ல விமர்சனமாக இருந்தால் நான் சந்தோஷப்படுவேன். கடுமையான விமர்சனமாக இருந்தால் உங்களுக்கு தெரிந்த யோசனைகளை சொல்லுங்கள் என்று உங்களிடம் கேட்பேன். நாம் எல்லோரும் யோசிக்க வேண்டிய விஷயம் இது.
எனக்கு தோன்றும் கருத்து என்னவென்றால், கல்வியையும் கல்வி திட்டங்களையும் வகுக்கும் பொறுப்பு மாநிலங்கள் கையில் இருக்க வேண்டும் என்பதுதான். பன்முகம், பல மொழிகள் என்று இருக்கும் இந்த நாட்டில் மாநில அரசுகளிடம்தான் கல்வி உரிமை இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
முன்பு அப்படித்தான் இருந்தது என்று சில பெரியவர்கள் சொன்னார்கள். எங்கே அந்த உரிமையை தவற விட்டோம் என்று கேட்டபோது எமர்ஜென்சி சமயத்தில் அதை மையத்தில் கொண்டு போய் வைத்துக்கொண்டார்கள் என்று சொன்னார்கள். அதன்பிறகு அதில் திருத்தங்கள் செய்யப்படவில்லை.
மாநிலங்கள் கல்வி திட்டங்களை வகுக்கும் அந்தஸ்தை, பொறுப்பை, பலத்தை, சக்தியை தங்கள் கையில் வைத்துக்கொள்ள வேண்டும் என்பது என்னுடையை ஆசை. பக்கத்து மாநிலங்களில் இருக்கிறவர்கள் ‘நீட்’டை ஏற்றுக்கொண்டு விட்டார்களே நீங்கள் மட்டும் ஏன் ஏற்க மறுக்கிறீர்கள் என்று கேட்கலாம்.
அவர்களெல்லாம் அதற்கு தேவையான முன் ஜாக்கிரதையில் தயார் நிலையில் இருந்தார்கள். அதனால் அவர்களால் நீட் தேர்வை எதிர்கொள்ள முடிந்தது. இங்கே அதற்கான எந்த ஏற்பாடுகளையும் நாம் செய்யவில்லை. நாம் என்பதை அரசு என்று சொல்லி மறுபடியும் அரசியல்வாதிகளைத்தான் திட்ட வேண்டியது இருக்கும்.
நான் அரசு என்று சொல்வது நம்மையும் சேர்த்துதான். இந்த குரலை இன்னும் முன்பாகவே எழுப்பி இருக்க வேண்டும். இந்த பிரச்சினையில் நாம் செய்ய வேண்டிய கடமைகளை செய்வோம்.’’
இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.