தமிழகம் முழுவதும் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் சம்பளம் ரத்து
தமிழகம் முழுவதும் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் சம்பளம் ரத்து செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும். 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரையை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 7-ந்தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஜாக்டோ ஜியோ அமைப்பு ஈடுபட்டது.இதையடுத்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அரசு அதிகாரிகள் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் 60 சங்கங்களைச் சேர்ந்த ஊழியர்கள் போராட்டத்தில் பங்கேற்கவில்லை. இவர்கள் தங்களது போராட்டத்தை அக்டோபர் 15-ந்தேதி வரை ஒத்திவைத்தனர்.
ஆனாலும் 17 சங்கங்களைச் சேர்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வியாழக்கிழமை முதல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களின் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்துக்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளை இடைக்கால தடை விதித்தது. இதனால் உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்கும் வகையில் அரசு ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்று தலைமை செயலாளர் சுற்றறிக்கை வெளியிட்டிருந்தார். ஆனாலும் கோர்ட்டு தடையை மீறி ஜாக்டோ ஜியோ அமைப்பின் ஒரு பிரிவினர் தமிழ்நாடு முழுவதும் நேற்று வேலைக்கு செல்லாமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை, திருப்பூர், கடலூர், திருநெல்வேலி, திண்டுக்கல், சேலம் உள்பட பல ஊர்களில் அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் மறியல் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
இதைத் தொடர்ந்து 7-ந்தேதியில் இருந்து வேலைக்கு வராத அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் யார் யார் என்று நேற்று அலுவலகம் வாரியாக கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு அன்றைய தின சம்பளம் ரத்து செய்யப்பட்டு உள்ளது.இது தவிர ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் நோட்டீசு அனுப்பப்பட உள்ளது. இதுகுறித்து சென்னை மாவட்ட கலெக்டர் வெ.அன்புச்செல்வனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் போராட்டத்துக்கு கோர்ட்டு தடை விதித்துள்ளதால் அதையும் மீறி சில ஊழியர்கள் வேலைக்கு வராமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க அரசு ஏற்கனவே அறிவுறுத்தி உள்ளது. அதன்படி நேற்று மாலையே நோட்டீசு அனுப்பப்பட்டுள்ளது. வேலைக்கு வராத காரணத்தால் அவர்களுக்கு அன்றைய தினம் சம்பளம் இல்லை என்றே கணக்கிடப்படும்.சென்னையை பொறுத்தவரை வருவாய் துறையில் 80 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் வேலைக்கு வந்திருந்ததால் அரசு பணிகள் பாதிக்கவில்லை. அம்மா திட்ட முகாமில் அனைத்து ஊழியர்களும் பங்கேற்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.
அரசு ஊழியர் சங்க பொதுச் செயலாளர் அன்பரசு கூறுகையில் போராட்டத்தில் ஈடுபட்டால் அரசாங்கம் சம்பளத்தை நிறுத்துவது வழக்கமான ஒன்றுதான். நாங்கள் அதை பின்னர் போராடி வாங்கிக் கொள்வோம். போராட்டத்தில் ஈடுபட்டு ஜெயிலில் இருந்த நாட்களை கூட நாங்கள் பணி காலமாக பெற்றுள்ளோம்.தமிழ்நாடு முழுவதும் 7 லட்சம் ஊழியர்கள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். எனவே அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து இன்று (சனிக்கிழமை) மாலை கூடும் உயர்மட்ட குழு கூட்டத்தில் முடிவு செய்து அறிவிப்போம்.இவ்வாறு அவர் பேசினார்.